பக்கம்:சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

"அருமை!" என்று காந்தி பாப் கூறினார். அதன் சாப்பாட்டுக்கு இது போதும் உணவு. உணவு தான் வாழ்க்கையின் ஜீவாதாரம், புலிகள் மனிதரைத் தின்கின்றன. மனிதர்கள் ஆடுகளைத் தின்கிறார்கள், ஆடுகள் அவை எதைத் தான் தின்னவில்லை; இதை சிந்திக்கத் தொடங்கினரல் அநாகரிகமாகவும் புராதனமாகவும் தோன்றும். ஆனால் பிரபஞ்சத்தின் இயக்கவிதியே இதுதான். இதிலிருந்து தப்பமுடியாது. இந்த இயக்கம் நின்றுவிட்டால், சிருஷ்டியே நின்று போகும்."

"மரக்கறி உணவு சாப்பிடுவதனால் நல்ல நிலை ஏற்படலாம்." என்றேன்.

"யார் சொன்னது இலைகளுக்கும் காய்கறிகளுக்கும் உயிரில்லை என்று நினைக்கிறாயா?"

அவற்றுக்கும் உயிர் உண்டு. நீங்களும் ஜகதீஷ் போஸும் அதை எனக்குக் கற்றுத் தந்தீர்கள். ஆனாலும் அது வேறுவித வாழ்க்கை தானே? தாவரங்களும் பிராணிகளும் ஒரே ரகமானவை இல்லையே"

"அவை வித்தியாசமானவை என்றா எண்ணுகிறாய்?"

"இல்லையா பின்னே? பேதங்களைப் பாருங்கள். மரங்கள் நடக்க முடியாது; தம் உணர்வுகளை வெளிப்படுத்த இயலாது. அவை எப்படி உணர்கின்றன என்று நமக்கு அறிவிக்கும் திறன் அவற்றுக்கு இல்லை. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?"

காந்தி பாபு ஏதோ சொல்லப் போகிறவர் போல் தோன்றினார். ஆனால் பேசவில்லை. தேநீரைக் குடித்துவிட்டு கீழ்நோக்கிய பார்வையுடன் அமைதியாக இருந்தார். பிறகு என்னை நோக்கினார். அவரது கவலை தோய்ந்த வெறித்த நோக்கு என்னைக் குழப்பியது. ஏதோ புரியாத அபாயத்தின் பயம் என்னுள் படர்ந்தது. அவருடைய தோற்றம் தான் எவ்வளவு மாறியிருந்தது!

அவர் மிக மெதுவாகப் பேசலானார்: "பரிமள் இங்கிருந்து இருபத்தோராவது மைலில் நான் வசிக்கிறேன். ஐம்பத்தெட்டாவது வயதில், உன் விலாசத்தைக் கண்டுபிடிக்க உன் பதிப்பாளரைத் தேடி மிக்க சிரமத்தோடு காலேஜ் வீதிக்குப் போனேன். இப்போது இங்கே இருக்கிறேன். விசேஷ காரணம் இன்றி நான் இப்படிச் செய்திருக்க மாட்டேன் என்பது உனக்குப் புரியும் என நம்புகிறேன். புரிகிறதா? இல்லை, அபத்தமான நாவல்கள் எழுதி எழுதி உன் பகுத்தறிவை நீ இழந்துவிட்டாயோ? ஒரு வேளை என்னையும் உன் கதை ஒன்றில் பயன்படுத்துவதற்கான டைப் என்று நீ நினைப்பாய்."

நான் வெட்கினேன். காந்தி பாபு சொன்னதில் தப்பு இல்லை. எனது நாவல் ஒன்றில் அவரை ஒரு பாத்திரமாக உபயோகிப்பது பற்றிய நினைப்பு என் உள்ளத்தில் ஒடத்தான் செய்தது.

14