பக்கம்:சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



"உன் எழுத்தை வாழ்க்கையோடு ஒட்டியதாக ஆக்கவில்லை என்றால், பரிமள், உனது நூல்கள் மேலோட்டமானவையாகவே இருக்கும். ஒன்றை நீ மறக்கக் கூடாது. உன் கற்பனை எவ்வளவு தெளிவாக இருந்தாலும், அது ஒருபோதும் உண்மையை விட விசித்திரமாக இராது. ஆனால் நான் உனக்கு உபதேசிக்க இங்கு வரவில்லை. உண்மையில், உன்னிடம் ஒரு உதவி யாசிக்கவே வந்தேன்."

நான் வியப்பில் ஆழ்ந்தேன். அவர் என்னிடம் என்ன விதமான உதவியை எதிர்பார்க்கிறார்?

"நீ இப்பவும் துப்பாக்கி வைத்திருக்கிறாய் அல்லவா? அல்லது அதைத் தலைமுழுகிவிட்டாயா?"

அவர் கேள்வியால் நான் திடுக்கிட்டேன். அவர் மனசில் என்ன தான் இருக்கிறது? "அதை நான் வைத்திருக்கிறேன். ஆனால் அதிகம் துரு ஏறியிருக்கும். ஏன் கேட்கிறீர்கள்?" என்றேன்.

"நாளை உன் துப்பாக்கியோடு நீ என் வீட்டுக்கு வர முடியுமா?"

நான் அவர் முகத்தைக் கூர்ந்து நோக்கினேன். அவர் வேடிக்கை பேசியதாய்த் தோன்றவில்லை. "நிச்சயம் குண்டுகளோடு தான்" என்றும் அவர் குறிப்பிட்டார். என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவர் மூளையில் கோளாறு இருக்குமோ என்று சந்தேகித்தேன். ஆனால் அவர் பேச்சு அப்படிக் காட்டவில்லையே? எப்பவும் அவர் ஒரு மாதிரி விந்தைப் போக்கு உடையவர் தான். இல்லையேல் ஏன் அவர் காட்டில், அபாயங்களுக்கு நடுவே விசித்திரச் செடிகளை தேடி அலைகிறார்?

"துப்பாக்கியோடு வர எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் எதற்காக என்று அறிய ஆவல். நீங்கள் வசிக்கும் இடத்தைச் சுற்றிக் கொடிய மிருகங்களோ திருடர்களோ உண்டோ?"

"நீ வந்ததும் நான் உனக்கு எல்லாவற்றையும் சொல்வேன். முடிவில் நீ துப்பாக்கியை சுட நேராமலே போகலாம். அப்படியே சுட்டாலும், நான் உன்னை சட்ட விரோதச் செயலில் ஈடுபடுத்த மாட்டேன். இது உறுதி."

காந்தி பாபு போக எழுந்தார். என் தோள்மீது கைவைத்துச் சொன்னார்: "பரிமள், நான் உன்னைத் தேடி வந்திருக்கிறேன், ஏனெனில் போனமுறை உன்னைப் பார்த்த போது, நீ என்னைப் போலவே சாகசச் செயல்களில் மோகம் கொண்டிருந்தாய். மனிதர்களோடு நான் என்றும் அதிகம் பழகியதில்லை. இப்போது என் தொடர்பு மேலும் குறுகிவிட்டது. எனக்கு இருக்கிற சொற்ப நண்பர்களிடையே உன்னைப் போன்ற திறமைசாலி வேறு எவரும் இல்லை."

முன்பு நான் உணர்ந்திருந்த வீரச் செயல் மீதான சிலிர்ப்பு என்னுள் மறுபடியும் கிளர்ந்தெழுவதாகத் தோன்றியது. நான் கேட்டேன்: "உங்கள் இடத்தை எப்படி அடைவது; எப்போது எங்கே..."

15