பக்கம்:சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்களை கண்டுபிடிக்கும் முயற்சிலேயே அவர் தன் உயிரை இழந்தார். அவர் உடல் அகப்படவேயில்லை. அவர் எப்படி இறந்தார் என்பதும் யாருக்கும் தெரியாது. அவர் டயரியின் இறுதிப் பக்கங்களில் இத்தாவரம் குறித்து அவர் எழுதியிருந்தார்.

"சந்தர்ப்பம் கிடைத்ததும் நான் நிகரகுவா போனேன். குடிமாலாவிலிருந்தே அங்கு வசித்த மக்கள் இந்த மரம் பற்றிப் பேசுவதைக் கேட்டேன். இதை அவர்கள் சைத்தான் மரம் என்றார்கள். பின்னர் சிலவற்றை நானே கண்டேன். அவை குரங்குகளையும் இதர பிராணிகளையும் தின்பதை நேரில் பார்த்தேன். வெகுவாய்த் தேடி அலைந்த பிறகு, என்னோடு எடுத்து வருவதற்கு வசதியான சிறு தாவரம் ஒன்றைக் கண்டேன். பாருங்கள், இரண்டு வருஷங்களில் அது எப்படி வளர்ந்திருக்கிறது!"

"அது இப்போ என்ன தின்கிறது?"

"நான் கொடுப்பதை எல்லாம். சில சமயம் நான் அதுக்காக எலிகளைப் பிடித்தது உண்டு. வழியில் காரில் அடிபட்டு நாய் அல்லது பூனை கிடந்தாலும், அதை இந்த மரத்துக்காக எடுத்து வரவேண்டும் என்று பிரயாகிடம் சொன்னேன். அவற்றையும் அது ஜீரணித்தது. நாம் சாப்பிடக்கூடிய மாமிச வகையை-கோழி, ஆடு எல்லாம் தான்-கொடுத்தேன். அண்மையில் அதன் பசி மிக அதிகமாகிவிட்டது. அதுக்கு தீனி போட்டு திருப்தி அளிக்க இயலவில்லை. தினம் இந்நேரத்தில் அது விழித்தெழும் போது, அதிகப் பரபரப்பும் குழப்பமும் பெற்று விடுகிறது. நேற்று ஒரு பேராபத்து நிகழ இருந்தது. அதுக்கு கோழி தர பிரயாக் அறைக்குள் போனான். ஒரு யானைக்குத் தீனி கொடுப்பது போல் தான் இதுக்கும் தர வேண்டும். முதலில் மரப்பகுதியின் உச்சியில் ஒரு மூடி திறக்கிறது. மரம் ஒரு தும்பிக்கையின் உதவியால் உணவை உயரே எடுத்துச் சென்று, உச்சியில் இருக்கிற ஒரு பொந்துக்குள் வைக்கிறது. அப்படி அது சிறிது உணவை உள்ளே வைக்கும் ஒவ்வொரு தடவையும் செப்டோபஸ் அமைதியாக இருக்கிறது. மீண்டும் அது தன் தும்பிக்கையை ஆட்டத் தொடங்கினால் அது இன்னும் பசியாக இருக்கிறது என்று அர்த்தம்.

"இதுவரை இரண்டு கோழிகள், அல்லது ஒரு சிறு ஆடு ஒரு நாளைக்கு செப்டோபஸுக்குப் போதுமானதாக இருந்தது. நேற்று முதல் ஏதோ மாறுதல் ஏற்பட்டிருக்கிறது. பிரயாக் இரண்டாவது கோழியைக் கொடுத்ததும் வழக்கம் போல் வெளியே வந்தான். தொடர்ந்து தும்பிக்கைகளை ஆட்டி அடிக்கிற ஒசை கேட்கவும் என்ன விஷயம் என்று அறிய அவன் மறுபடியும் உள்ளே போனான்.

"நான் என் அறையில் குறிப்பு எழுதிக்கொண்டிருந்தேன். திடீரென்று

24