பக்கம்:சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒரு அலறல் கேட்டது. உடனே அங்கே ஒடிப்போனேன். கோரக் காட்சியைக் காண நேர்ந்தது. செப்டோபஸின் தும்பிக்கைகளில் ஒன்று பிரயாகின் வலதுகையை இரும்புப்பிடியாகப் பற்றி இருக்க, அவன் அதை விடுவிக்க முழு பலத்தோடும் போராடினான். இன்னொரு தும்பிக்கை அவனை மறுபுறமிருந்து கவ்விப் பிடிக்க, வெறியோடு நெருங்கிக் கொண்டிருந்தது.

நேரம் தாழ்த்தாமல் நான் என் கைத்தடியால் தும்பிக்கை மீது பலமாக அறைந்தேன். என் இரு கைகளாலும் பிரயாகைப் பிடித்து இழுத்தேன். ஒரு மாதிரி அவனைக் காப்பாற்றினேன். செப்டோபஸ் பிரயாகின் சதையில் ஒரு துண்டைப் பிய்த்து எடுத்துவிட்டது. அதை அது தன் வாய்க்குள் போடுவதை நான் என் கண்களால் பார்த்தேன். இது தான் எனக்குக் கவலை தருகிறது."

நாங்கள் வராந்தாவை அடைந்தோம். காந்தி பாபு உட்கார்ந்து, தன் நெற்றியைத் துடைப்பதற்காகக் கைக்குட்டையை எடுத்தார்.

"நான் இதுவரை கருதியதேயில்லை செப்டோபஸ் மனித இறைச்சியால் வசீகரிக்கப்படும் என்று. இது பேராசையாக இருக்கலாம். அல்லது ஒரு விதக் கொடுரமாகவும் இருக்கும். நேற்று நடந்ததற்குப் பிறகு அதைக் கொல்வது தவிர எனக்கு வேறு வழியில்லை. நேற்று அதன் உணவில் விஷம் கலந்து கொடுத்தேன். ஆனால் அது மிக சாமர்த்தியம் பெற்றிருக்கிறது. தும்பிக்கையால் அது உணவைத் தொட்டது; தூக்கி எறிந்து விட்டது. மீதி இருக்கிற ஒரே வழி அதைச் சுடுவது தான். பரிமள், நான் ஏன் உன்னை இங்கே கூப்பிட்டேன் என்பது இப்போது புரிந்திருக்கும்."

நான் ஒரு கணம் யோசித்தேன். "ஒரு குண்டு அதைக் கொன்றுவிடும் என்று உறுதியாக நம்புகிறீர்களா?" என்று கேட்டேன்.

"அது சாகுமா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அதற்கு ஒரு மூளை இருக்கிறது. இது எனக்கு மிக உறுதியாகத் தெரியும். அது சிந்திக்கிறது. இதற்குப் போதிய சான்று உண்டு. நான் அதன் அருகே எத்தனையோ முறை போயிருக்கிறேன். ஆனால் அது ஒரு போதும் என்னைத் தாக்கியதில்லை. ஒரு நாய் தன் எஜமானை அறிவது போல், அது என்னை அறிந்திருக்கிறது. பிரயாகிடம் வன்முறையாக அது நடக்கக் காரணம் இருக்கலாம். சில தருணங்களில் பிரயாக் செப்டோபஸைச் சீண்டி விளையாட முயன்றான். உணவை நீட்டி அதற்கு ஆசைகாட்டி உடனே அதை அகற்றி விடுவான். அல்லது தும்பிக்கை அருகில் உணவைக் கொண்டுபோவது; வேடிக்கை பார்க்க, பிறகு உணவு தராமலே விலகி விடுவது-இப்படி எல்லாம் செய்வான். அதுக்கும் மூளை இருக்கிறது. எங்கே இருக்க வேண்டுமோ அங்கே அதாவது அதன் தலையில்-

25