பக்கம்:சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சீதா பார்த்தாள். ஒரு கிளையின் கவட்டையில் சுள்ளிகள் தாறுமாறாக அடுக்கிவைக்கப்பட்ட ஒரு கூடு.

கூட்டில் நான்கு முட்டைகள். நீலப் பசுமை நிறமும் புள்ளிகளும் கொண்டவை. காகம் அவற்றின் மீது உட்கார்ந்து, வருத்தமாய்க்கத்தியது. காகம் துயரத்தோடு இருந்தபோதிலும், அது அங்கே இருந்தது சீதாவுக்கு உற்சாகம் ஊட்டியது. அவள் தனியாக இருக்கவில்லையே. யாரும் இல்லாமல் இருப்பதைவிட, துணைக்கு ஒரு காகம் இருப்பது மேல்தான்.

இதர பொருள்கள் குடிசைக்குள்ளிருந்து மிதந்து வந்தன-பெரிய பூசணிக்காய், தாத்தாவுக்குச் சொந்தமான சிவப்புத் தலைப்பாகை அது கட்டவிழ்ந்து நீளப் பாம்பு போல் நீரில் நெளிந்தது.

மரம் காற்றிலும் மழையிலும் ஆடியது. காகம் கத்தியது. மேலே பறந்தது. சிலமுறை மரத்தை வட்டமிட்டது. மீண்டும் கூட்டுக்குத் திரும்பியது. சீதா கிளையோடு ஒட்டிக்கொண்டாள்.

மரம் அடி முதல் நுனி வரை அதிர்ந்தது. சீதாவுக்கு அது பூமி அதிர்ச்சி மாதிரிப்பட்டது.

இப்போது ஆறு நெடுகிலும் அவளைச் சுற்றிச் சுழன்றது. குடிசையின் கூரையைத் தொட்டுவிட்டது. விரைவில் மண்சுவர்கள் இற்றுவிழுந்து மறையும். பெரிய பாறையையும் தூரத்தில் நின்ற சில மரங்களையும் தவிர, தண்ணிர் தான் பார்வைக்குப் புலனாயிற்று.

நெட்டையான பழைய அரசமரம் நெட்டுயிர்த்தது. அதன் நீண்டு சுருண்ட வேர்கள் கெட்டியாய் தரையைப் பற்றியிருந்தன. ஆனால் மண் இளகிக் கொண்டிருந்தது. கற்கள் நீரில் அடிபட்டுச் சென்றன. வேர்கள் வேகமாய்த் தங்கள் பிடியை இழந்தவாறிருந்தன.

ஏதோ கோளாறு என்று காகம் அறிந்திருக்க வேண்டும். அது மேலே பறந்து போய், மரத்தையே வளையமிட்டது. அதில் உட்காரவும் மனமின்றி, பறந்து போகவும் விரும்பாமல் தவித்தது.

சீதாவின் ஈர நூல் ஆடை அவளது மெலிந்த உடலோடு ஒட்டிக் கொண்டது. மழைநீர் அவளது நீண்ட கருங்கூந்தலிலிருந்து வடிந்தது. அது மரத்தின் ஒவ்வொரு இலையிலும் வழிந்தது. காகமும் நனைந்து நீர் சொட்டியது.

மரம் பெருமூச்சு விட்டு, மீண்டும் அசைந்தது. கீழிருந்து மண் திரண்டு புரண்டது. மரம் அசைந்ததும், அது சரிந்தது; மெதுவாக முன்னே அசைந்தது, பக்கத்துக்குப் பக்கம் சிறிது திரும்பியது. தரைமீது தன் வேர்களை இழுத்தபடி நகர்ந்தது. ஆற்றின் மைய ஒட்டத்தினுள் அது நழுவியது.

***

37