பக்கம்:சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆகும். ஆனாலும், அதன் கிளைகளில் அமர்ந்து அதன் பழங்களை அவள் தின்று மகிழும் ஒரு நாளை சீதா கற்பனை செய்து களித்தாள்!

மெதுவாக மழை ஒய்ந்தது. கிராமங்களில் மக்கள் மறுபடியும் நிலத்தை உழுது, குளிர் காலத்திற்கான புதிய பயிர்களை நடத் தொடங்கினார்கள். மாட்டுச் சந்தைகளும், குத்துச் சண்டைகளும் நடந்தன. பகல் நேரங்கள் வெப்பத்தோடு புழுக்கமாய் இருந்தன. ஆற்றில் தண்ணிர் கலங்கலாக இல்லை. ஒரு மாலையில் தாத்தா பெரிய மாவுதிர் மீனைப் பிடித்தார். சீதா அதை ருசியான கறியாக ஆக்கினாள்.

***

தாத்தா குடிசைக்கு வெளியே புகை பிடித்துக் கொண்டிருந்தார். சீதா தீவின் கடைகோடியில் பாறைகள் மீது துணிகளை உலர்த்தியவாறு இருந்தாள்.

அவளுக்குப் பின்னால் மெல்லிய காலடி ஒசை எழுந்தது. அவள் திரும்பிப் பார்த்தாள். அங்கே கிருஷ்ணன் சிரித்தபடி நின்றான்.

"நீ வரவே மாட்டாய் என்று நினைத்தேன்" என்றாள் சீதா.

"எங்கள் ஊரில் நிறைய வேலை இருந்தது. என் புல்லாங்குழலை நீ வைத்திருக்கிறாயா?"

"ஆமாம். ஆனால் நான் அதைச் சரியாக வாசிக்க முடியவில்லை."

"நான் உனக்குக் கற்றுத் தருவேன்" என்று கிருஷ்ணன் கூறினான்.

அவன் அவள் அருகில் அமர்ந்தான். இருவரும் தங்கள் கால்களை நீரில் நனைத்தார்கள். தண்ணிர் இப்போது தெளிவாக இருந்தது. அதில் நீல வானம் பிரதிபலித்தது. ஆற்றுப் படுகையின் மணலையும் சிறு கற்களையும் நன்கு பார்க்க முடிந்தது.

"சில வேளை ஆறு கோபமாகவும், சில வேளை அன்பாகவும் இருக்கிறது" என்றாள் சீதா.

நாம் ஆற்றைச் சேர்ந்தவர்கள் என்று கிருஷ்ணன் சொன்னான்.

அது ஒரு நல்ல ஆறு. ஆழமானது. வலியது. மலைகளில் தொடங்கி, கடலில் முடிந்தது.

அதன் கரைகளில், பல நூறு மைல்களுக்கு, லட்சக் கணக்கான மக்கள் வசித்தார்கள். சீதா அவர்களில் ஒரு சிறு பெண். அவளைப் பற்றி எவரும் கேள்விப்பட்டதில்லை. அந்தக் கிழவர், பையன், ஆறு தவிர வேறு எவரும் அவளை அறிந்ததும் இல்லை.

(ஆங்கிலக் கதை)

46