உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அவன் சட்டையில் இவன் மண்டை...
பன்னாலால் படேல்


ஹோலி பண்டிகையின் அந்தி நேரம். கிராமப் பையன்கள் அநேகர், வேப்பமரத்தின் கீழ் கூடிநின்று, ஒருவர் மீது ஒருவர் மண்ணை வாரி வீசி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

அம்ரித்தும் ஐசபும் கைகோர்த்து வந்தனர். மற்றவர்களோடு சேர்ந்தனர். இருவரும் புதிய ஆடைகள் அணிந்திருந்தார்கள். நிறம், அளவு, துணிரகம்-அனைத்திலும் ஒரே மாதிரியாக விளங்கிய அவை அன்று தான் தைக்கப்பட்டிருந்தன. இரண்டு பேரும் ஒரே வகுப்பில், ஒரே பள்ளியில் படித்தார்கள். தெருமுனையில் எதிர் எதிராக இருந்த வீடுகளில் வசித்தார்கள். அவர்களின் பெற்றோர் விவசாயிகள். இருவருக்கும் ஒரே அளவு நிலம் இருந்தது. கஷ்ட காலங்களில் சமாளிக்க அவ்வப்போது இருவரும் வட்டிக்காரனிடம் பணம் கடன் வாங்கினார்கள். சுருக்கமாக, இரண்டு பையன்களும் எல்லா விதங்களிலும் சமம் தான். ஆனால், அம்ரித்துக்கு அப்பாவும் அம்மாவும் மூன்று சகோதரர்களும் இருந்தனர். ஐசபுக்கு அப்பா மட்டுமே இருந்தார்.

இரண்டு பையன்களும் வந்து, நடைபாதையில் உட்கார்நதார்கள். இருவரும் ஒரே மாதிரி ஆடை அணிந்திருப்பதைக் கண்டதும், ஏ அம்ரித் ஐசப், நீங்கள் இருவரும் உங்கள் அடையாளங்களை மாற்றிக் கொண்டீர்களா?" என்று இதர பையன்களில் ஒருவன் கேட்டான்.

இது இன்னொருவனுக்கு விஷம எண்ணம் ஒன்றைத் தந்தது. நீங்கள் இருவரும் ஏன் மல்யுத்தம் புரியக் கூடாது? நீங்கள் இரண்டு பேரும் பலத்திலும் ஒரே ஈடாக இருக்கிறீர்களா அல்லது ஒருவன் மற்றவனை விட வலிமை உடையவனா என்று பார்ப்போமே" என அவன் கூறினான்.

இது அருமையான எண்ணம் என முதல் பையன் கருதினான். "ஆமா, அம்ரித், ஐசப். உங்களில் யார் சிறந்தவர் என்று பார்க்கலாம்" என்றான்.

"வாங்க சும்மா வேடிக்கை தான்" என்று வேறொருவன் கத்தினான்.

ஐசப் அம்ரித்தைப் பார்த்தான். "வேண்டாம். என் அம்மா என்னை உதைப்பாள்" என்று அம்ரித் உறுதியாய்ச் சொன்னான்.