பக்கம்:சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

"நிச்சயமாக என்னை அடிப்பார். ஆனால் எனக்கு அம்மா இருக்கிறாள். அவள் என்னைப் பாதுகாப்பாள்" என்றான் அம்ரித்.

அம்ரித்தின் அப்பா அவனை அடிக்க முயல்கையில் அவன் அம்மா பின்னே பதுங்கிக் கொள்வதை ஐசப் அடிக்கடி கவனித்திருக்கிறான். அவன் அம்மாவிடம் ஒரிரு அறைகள் வாங்க நேரிடும். சந்தேகமில்லை. ஆனால் அம்மாவின் மென்மையான அடிக்கும், தன் அப்பாவின் முரட்டுக் கைவேகத்துக்கும் வித்தியாசம் உண்டு தான்.

ஐசப் தயங்கினான். அந்நேரத்தில் அருகே யாரோ இருமுவதை அவன் கேட்டான். இருவரும் வேகமாய் சட்டைகளை மாற்றிக் கொண்டு, சந்திலிருந்து வெளிப்பட்டு, எச்சரிக்கையோடு வீடு நோக்கி நடந்தார்கள்.

அம்ரித்தின் நெஞ்சு பயத்தால் பதைபதைத்தது. அவனுக்கு அதிர்ஷ்டம் தான். அன்று ஹோலிப் பண்டிகை. முரட்டு விளையாட்டு நடக்கத் தானே செய்யும் அவன் சட்டை கிழிந்திருப்பதை அம்மா பார்த்து முகத்தைச் சுளித்தாள். ஆனால் அவனை மன்னித்து விட்டாள். ஊசியும் நூலும் எடுத்து, கிழிசலைத் தைத்தாள்.

பையன்களின் பயம் போய்விட்டது. அவர்கள் திரும்பவும் கை கோர்த்தவாறு, ஊருக்கு வெளியே நிகழும் பண்டிகை சொக்கப் பனையை வேடிக்கை பார்க்கப் போனார்கள்:

சட்டை மாற்றத்தை கண்டு கொண்ட ஒரு பையன், "ஒகோ, நீங்கள் பரஸ்பரம் மாற்றிக் கொண்டீர்களா?" என்று கேலி பண்ணி அவர்கள் மகிழ்ச்சியைக் கெடுத்தான்.

தாங்கள் சட்டைகளை மாற்றிக் கொண்டதை அந்தப் பையன் பார்த்திருக்கிறான் என அஞ்சி, அம்ரித்தும் ஐசயும் நழுவி ஒட முயன்றார்கள். இதற்குள் இதர பையன்களும் அறிந்து விட்டனர். நடந்ததைப் புரிந்துகொண்டு "சட்டை அங்கே, மண்டை இங்கே!" என்று கத்தினர்.

இருவரும் தப்பிச் செல்ல முயன்றனர். ஆனால் அந்தக் கும்பல் அவர்கள் பின்னாலேயே "சட்டை அங்கே மண்டை இங்கே, மண்டை அங்கே, சட்டை இங்கே" என்று கூவியது. விஷயம் அப்பா காதை எட்டும் என அஞ்சிய இருவரும் நண்பர்களும் அவரவர் வீட்டுக்கு ஒடினார்கள்.

ஐசயின் அப்பா, வீட்டு முற்றத்தில், புகை பிடித்தபடி ஒரு கட்டிலில் இருந்தார். அவர் இருவரையும் கூப்பிட்டார். "நீங்கள் ஏன் உங்கள் நண்பர்களிடமிருந்து ஒடி வருகிறீர்கள் வாங்க, என் பக்கத்தில் உட்காருங்கள்" என்று உத்தரவிட்டார்.

அவரது மென்மையான குரல் பையன்களை குழப்பியது. "நாம் பயந்தது சரிதான். அவர் உண்மையை அறிந்திருக்கிறார். பிரியமாக இருப்பது போல் பாசாங்கு பண்ணுகிறார்" என்று நினைத்தார்கள்.

52