பக்கம்:சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நிறைந்திருந்தது; பாம்பு கடித்தால் கூட அவனைப் பாதிக்காது என்று பலரும் நம்பினார்கள். அவன் சதா கையில் கவண் வைத்திருந்தான். குறி தவறாது கல்லெறிவான். பறவைகள் தான் அவனுக்குப் பிடித்தமான குறிகள். அவன் ஒரு மரத்தின் கீழ் நிற்பான். குறிபார்ப்பான். மறுகணம் பறவையின் அலறல் மேலெழும் சிறகுச் சிதறல்கள் கீழே மிதந்து வரும். அவன் மரத்தின் மேலே ஏறி, முட்டைகளை எடுப்பான்; கூட்டை அடியோடு நாசம் செய்வான்.

அவன் பழிவாங்கும் குணமுள்ளவன். பிறரைக் காயப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைந்தான். எல்லாப் பையன்களும் அவனுக்கு அஞ்சினர். அவன் அம்மா கூட அவனை ராட்சசன் என அழைத்தாள். அவன் நிஜார்ப் பைகள் விசித்திரப் பொருள்களால்-உயிருள்ள கிளி, பலவித முட்டைகள் முள்ளெலி போன்றவற்றால்-எப்போதும் உப்பியிருக்கும்.

போதி ராஜ் யாருடனாவது சண்டையிட்டால், அவன் மாடு மாதிரி தலைநீட்டிப் பாய்ந்து மோதுவான்; அல்லது தாறுமாறாக உதைப்பான், கடிப்பான். பள்ளி முடிந்ததும், நாங்கள் வீடு திரும்புவோம். ஆனால் போதிராஜ் சுற்றித் திரியப் போவான்.

அவனிடம் விநோதக் கதைகளின் ஸ்டாக் நிறைய இருந்தன. ஒரு நாள் அவன் சொன்னான். "எங்கள் வீட்டில் ஒரு உடும்பு வசிக்கிறது. உடும்பு என்றால் என்ன என்று தெரியுமா?"

"தெரியாது. உடும்பு என்பது என்ன?” அது ஒரு வகை ஊரும் பிராணி. ஒரு அடி நீளம் இருக்கும். அதுக்கு நிறைய கால்களும் கூரிய நகங்களும் உண்டு"

நாங்கள் நடுங்கினோம்.

"எங்கள் வீட்டில் மாடிப்படியின் கீழே ஒரு உடும்பு வசிக்கிறது-என்று அவன் தொடர்ந்தான். அது ஒரு முறை ஒன்றைப் பிடித்துக் கொண்டால், என்ன வந்தாலும் சரி, தன் பிடியை தளரவிடாது.

நாங்கள் திரும்பவும் நடுங்கினோம்.

"திருடர்கள் உடும்புகள் வைத்திருப்பார்கள். உயரமான சுவர்களில் ஏற அவற்றை உபயோகிப்பார்கள். அவர்கள் உடும்பின் பின்கால்களில் ஒரு கயிற்றைக் கட்டி, அதை உயரே விட்டெறிவார்கள். உடும்பு சுவரைத் தொட்டதும், அதை இறுகப் பற்றிக் கொள்ளும். பத்துப் பேர் சேர்ந்து இழுத்தால் கூட அந்தப் பிடியை விலக்க முடியாது. அவ்வளவு உறுதி. பிறகு திருடர்கள் கயிற்றின் உதவியால் சுவர் மீது ஏறுவார்கள்."

"உடும்பு எப்போது பிடியைத் தளர்த்தும்?"

"திருடர்கள் மேலே ஏறியானதும், அதற்குச் சிறிது பால் கொடுப்பார்கள். உடனே அது தன் பிடியை விட்டுவிடும்."

57