பக்கம்:சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 இப்படிப்பட்ட கதைகளை போதிராஜ் சொல்வான்

என் தந்தைக்குப் பதவி உயர்வு கிட்டியது. நாங்கள் ஒரு பெரிய பங்களாவில் குடிபுகுந்தோம். அது பழங்காலத்து பங்களா. நகரின் வெளியே இருந்தது. செங்கல் தரை, உயரமான சுவர்கள், சரிவான கூரை எல்லாம் இருந்தன. ஒரு தோட்டம். அங்கு மரங்களும் செடிகளும் நிறைந்திருந்தன. பங்களா வசதியானது தான். ஆனால் பெரிதாய், காலியாய்த் தோன்றியது. அது நகரிலிருந்து மிகத் தள்ளி இருந்ததால் என் நண்பர்கள் அபூர்வமாகவே என்னைக் காணவந்தார்கள்.

போதி ராஜ் மட்டும் விதி விலக்கு. அவனுக்கு அது நல்ல வேட்டைக் களமாகத் தோன்றியது. மரங்களில் அநேகம் கூடுகள் இருந்தன. குரங்குகள் சஞ்சரித்தன. புதர்களின் அடியில் ஒரு ஜோடி கீரிப்பிள்ளைகள் வசித்தன. வீட்டின் பின்னே ஒரு பெரிய அறை. அதிகப்படியான சாமான்களை அம்மா அங்கே போட்டு வைத்திருந்தாள். இந்த அறை புறாக்களின் புகலிடமாக அமைந்திருந்தது. அவற்றின் கூவலை நாள் முழுதும் கேட் முடியும். வென்ட்டிலேட்டரின் உடைந்த கண்ணாடி அருகில் ஒரு மைனாக் கூடு இருந்தது. அறையின் தரை நெடுக சிறகுகள், பறவை எச்சங்கள் உடைந்த முட்டைகள், மற்றும் கூடுகளிலிருந்து விழுந்த வைக்கோல் துணுக்குகள் சிதறிக் கிடந்தன.

ஒரு முறை போதி ராஜ் ஒரு முள் எலி கொண்டு வந்தான். அதன் கரிய வாயும் கூரிய முட்களும் என்னைக் கலவரப்படுத்தின. போதி ராஜூடன் நான் நட்புக் கொள்வதை என் அம்மா அங்கீகரிக்கவில்லை. ஆயினும், நான் தனித்து இருப்பதையும், எனக்குத் துணை தேவை என்பதையும் அவள் உணர்ந்ததால் எதுவும் சொல்லவில்லை. என் அம்மா அவனைப் பிசாசு என்று குறிப்பிட்டாள். பறவைகளைத் துன்புறுத்தக் கூடாது என்று அவனிடம் அடிக்கடி சொன்னாள்.

ஒரு நாள் என் அம்மா என்னிடம் கூறினாள்: "உன் நண்பன் கூடுகளை அழிப்பதில் ஆசை உடையவன் என்றால், அவனை நம் சாமான் அறையைச் சுத்தப்படுத்தச் சொல். பறவைகள் அதை ரொம்ப அசிங்கப்படுத்திவிட்டன."

நான் மறுப்புத் தெரிவித்தேன். "கூடுகளை நாசப்படுத்துவது கொடுமை என்று சொன்னாயே."

"அவன் பறவைகளைக் கொல்ல வேண்டும் என்று நான் சொல்ல வில்லை. அவற்றைக் காயப்படுத்தாமலே அவன் கூடுகளை அகற்ற முடியும்"

மறுநாள் போதிராஜ் வந்ததும் நான் அவனை சாமான் அறைக்கு இட்டுச் சென்றேன். அது இருண்டிருந்தது. ஏதோ மிருகத்தின் குகைக்குள் நுழைந்தது போல் நாற்றமடித்தது.

58