பக்கம்:சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உண்மையில் எனக்குக் கொஞ்சம் பயம்தான். போதிராஜ் அவன் இயல்புப்படி நடந்து, கூடுகளை அழித்தால், பறவைகளின் சிறகுகளைப் பிய்த்தால், அவற்றின் முட்டைகளை உடைத்தால், என்ன பண்ணமுடியும்? எங்கள் நட்பை ஆதரிக்காத அம்மா, சாமான் அறையைச் சுத்தம் செய்ய போதி ராஜை அழைத்துப் போகும்படி என்னை ஏன் ஏவினாள்? இது எனக்குப் புரியவில்லை.

போதிராஜ் தன் கவணைக் கொண்டு வந்திருந்தான். கூரையின் கீழிருந்த கூடுகளின் நிலைகளை அவன் கவனமாக ஆராய்ந்தான். கூரையின் இரண்டு பக்கங்களும் கீழ்நோக்கிச் சாய்ந்திருந்தன; அவற்றின் குறுக்கே நீண்ட உத்திரம் பாதுகாப்பாக இருந்தது. அதன் ஒரு முனையில், காற்றோடி அருகே, ஒரு மைனாக்கூடு இருந்தது. இலவம் பஞ்சுத் துணுக்குகளும் கந்தையும் அதிலிருந்து தொங்குவதை நான் கண்டேன். புறாக்கள் சில ஒன்றுக் கொன்று கூவிக் கொண்டு உத்திரத்தில் உல்லாச நடை பழகின.

போதி ராஜ் கவனால் குறிபார்த்தபடி, "மைனாக் குஞ்சுகள் கூட்டில் இருக்கின்றன" என்றான்.

சின்னஞ்சிறு மஞ்சள் அலகுகள் இரண்டு எட்டிப் பார்ப்பதை நான் கவனித்தேன்.

"பார்! இது கங்கா மைனா, இவ்வட்டாரத்தில் இது சாதாரணமாகக் காணப்படுவதில்லை. பெரிய மைனாக்கள் தங்கள் இனத்திலிருந்து பிரிந்து இங்கே வந்திருக்க வேண்டும்" என்று போதி ராஜ் விளக்கினான்.

"பெரிய மைனாக்கள் எங்கே?" என்று கேட்டேன்.

"இரை தேடிப் போயிருக்கும். சீக்கிரம் வந்துவிடும்." அவன் தன் கவணை உயர்த்தினான்.

நான் அவனைத் தடுக்க விரும்பினேன். ஆனால் நான் என் வாயைத் திறக்கும் முன் ஒரு இரைச்சல் எழுந்தது. பிறகு, சிறு கல் கூரையின் தகரத்தைத் தாக்கியதால் எழுந்த உரத்த ஒசை கேட்டது.

சின்ன அலகுகள் மறைந்தன. கூவலும் கிளுகிளுப்பும் ஒடுங்கின. எல்லாப் பறவைகளும் பயந்து வாய் மூடிவிட்டதாகத் தோன்றியது.

போதி ராஜ் மற்றுமொரு கல்லைப்பறக்க விட்டான். இம் முறை அது உத்திரத்தில்பட்டது. போதி ராஜ் எப்பவும் குறி வைப்பதில் பெருமைப் படுபவன். இரு முறை குறி தவறிவிட்டான். அவன் தன் மீதே கோபம் கொண்டான். குஞ்சுகள் கூட்டின் விளிம்பில் எட்டிப் பார்க்கவும், அவன் மூன்றாவது முறை முயன்றான். இம்முறை கல் கூட்டின் ஒரு பக்கத்தைத் தாக்கியது. சிறிது வைக்கோலும் பஞ்சும் விழுந்தன-ஆனால் கூடு அதே இடத்தில் இருந்தது.

59