பக்கம்:சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



போதி ராஜ் மீண்டும் தன் கவணை உயர்த்தினான். திடீரென்று ஒரு பெரிய நிழல் அறையின் குறுக்கே படிந்தது. காற்றோடியின் வெளிச்சத்தை அது மறைத்தது. திடுக்கிட்டு நாங்கள் மேலே பார்த்தோம். எங்களை அச்சுறுத்தும் விதத்தில் நோக்கியபடி ஒரு பருந்து தன் இறக்கைகளை விரித்து நின்றது.

"இது பருந்துக் கூடாகத் தான் இருக்கும்" என்றேன்.

"இல்லை. பருந்து எப்படி இங்கே கூடு கட்டும்? பருந்து எப்பவும் மரத்தில் தான் கூடு கட்டும். இது மைனாக் கூடுதான்."

குஞ்சுகள் தங்கள் இறக்கைகளை அடித்து, பலமாகக் கத்தத் தொடங்கின. நாங்கள் மூச்சடக்கி நின்றோம். பருந்து என்ன செய்யும்?

பருந்து காற்றோடியிலிருந்து நகர்ந்தது. உத்திரத்தில் தங்கியது. அது தன் சிறகுகளை மடக்கிக் கொண்டது. மெலிந்த கழுத்தை அசைத்தது. இப்படியும் அப்படியும் உற்று நோக்கியது.

பறவைகளின் பீதியான கூச்சல் காற்றை நிறைத்தது.

"இந்தப் பருந்து தினசரி இங்கே வருகிறது" என்று போதி ராஜ் சொன்னான்.

பிய்ந்த சிறகுகள், வைக்கோல், பறவைகளின் இறைச்சித் துண்டுக்ள் எல்லாம் ஏன் தரையில் சிதறியிருந்தன என்பதை நான் புரிந்து கொண்டேன். பருந்து அடிக்கடி கூடுகளை வேட்டையாடியிருக்க வேண்டும்.

போதி ராஜ் பருந்தின் மீதிருந்து தன் பார்வையை அகற்றவில்லை. அது மெதுவாகக் கூட்டை நோக்கி நகர்ந்து சென்றது. பறவைக் கூச்சல்கள் உச்சிநிலை எய்தின.

நான் பரபரத்தேன். மைனாக் குஞ்சுகளைப் பருந்து அல்லது போதி ராஜ் கொல்வதில் என்ன வித்தியாசம் இருக்கப் போகிறது? பருந்து வந்திராவிட்டால் போதி ராஜ் நிச்சயம் கூட்டை ஒழித்துக் கட்டியிருப்பான்.

போதி ராஜ் கவணை உயர்த்தி, பருந்தைக் குறி வைத்தான்.

"பருந்தை அடிக்காதே. அது உன்னைத் தாக்கும்" என நான் கத்தினேன். ஆனால் அவன் சட்டை செய்யவில்லை. கல் பருந்து மீது படவில்லை, கூரையைத் தாக்கியது. பருந்து சிறகுகளை அகல விரித்து, கீழே உற்று நோக்கியது.

நான் பயந்து, "இங்கிருந்து போய்விடுவோம்" என்றேன்.

‘பருந்து குஞ்சுகளைத் தின்றுவிடுமே.’ இப்படி அவன் சொன்னது விசித்திரமாகத் தொனித்தது.

போதி ராஜ் திரும்பவும் குறி வைத்தான். பருந்து உத்திரத்தை விட்டு நகர்ந்தது. தன் சிறகுகளைப் பரப்பி, அரை வட்டமாய்ப் பறந்து, குறுக்குச் சட்டத்தில் அமர்ந்தது. குஞ்சுகள் தொடர்ந்து அலறின.

60