என்ன மோசமான பையன்! அவனை உதைக்க வேண்டியது தான், மற்றப் பையன்களோடு அவன் சண்டை போடுவது பற்றியும் அதிகம் கேள்விப் படுகிறேன். அவனைக் கூப்பிடு உடனே. "மோகன்! ஏய் மோகன்!" தலைமை ஆசிரியர் தன் பியூனை கூப்பிட்டார். அவர் குரலின் வெடிப்பைக் கேட்டே, தலைமை ஆசிரியர் வெகு கோபமாக இருக்கிறார் என மோகன் புரிந்து கொண்டான். உள்ளே விரைந்து, "என்ன ஐயா?" என்று பணிவுடன் கேட்டான்.
"சீக்கிரம் போய் ஐந்தாம் வகுப்பு தபனைக் கூட்டி வா" என்று அவர் கட்டளையிட்டார்.
தபன் பதுமணி கிராமத்தின் குமாஸ்தாவான ரத்தனின் இரண்டாவது மகன். தோற்றத்தில் மெலிந்திருப்பினும் பலசாலி. சற்று கறுப்பு நிறம். ஒளி நிறைந்த கண்கள் கொண்டவன். படிப்பில் கெட்டி. ஆனால், வீட்டிலும் வெளியிலும் சதா ஏதாவது விஷமத்தனங்கள் செய்து வம்பில் சிக்கிக் கொள்வான். அவனாக வலியச் சண்டைக்குப் போகமாட்டான். ஆனால் யாராவது அவனை வம்புக்கு இழுத்தால் பதிலடி கொடுக்க அவன் தயங்குவதில்லை. தன் வயதுப் பையன்களிடையே அவனே தலைவன். அவர்களுக்காகப் பரிந்து அடிதடியில் இறங்க அவன் எப்பவும் தயாராக இருந்தான். அவன் பிரபலமானவன். அவன் சகாக்கள் அவனை மதித்தார்கள்.
கிராமத்தின் ஆரம்பப்பள்ளியில் கற்று முடிந்ததும், தயன் பதினைந்து மைல்களுக்கு அப்பால் உள்ள உயர்நிலைப்பள்ளிக்குப் போனான். தன் மாமாவுடன் ஒரு வருடம் தங்கியிருந்தான். மீண்டும் ஊருக்கு வந்து அவன் ஞானபீடம் உயர்நிலைப் பள்ளியில் படிக்கிறான். ஊரிலிருந்து ஒன்றரை மைல் தூரத்தில் இருக்கிறது அது.
அவன் ஞானபீடத்தில் சேர்ந்து ஒரு மாதம் தான் ஆகிறது. அதற்குள் அவன் மீது ஒரு குற்றச்சாட்டு வந்துவிட்டது. பதுமணி கிராமத்தின் கடைக்காரன் ஹரன் தலைமை ஆசிரியரிடம் முறையிட்டான். தபனும் பல சிறுவர்களும் சேர்ந்து முன்தினம் மாலையில் அவன் கடைமீது கற்களை