பக்கம்:சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நான் ராகுலனைக் காலால் உதைத்து, ராணியை விடும்படி செய்தேன். அதை என் கைகளில் தூக்கினேன். அது பயத்தால் நடுங்கியது. ராகுலன் குரைத்தபடி வெறியோடு குதித்தது. அதன் வாயிலிருந்து எச்சில் வடிந்தது. நான் கூட அதைக் கண்டு சிறிது பயந்து போனேன். அப்பாவி ராணி மோசமாகக் கடியுண்டிருந்தது. அதன் பணி வெள்ளை உடலில் ரத்தம் திட்டுதிட்டாகத் தென்பட்டது. எனக்கு ராகுலன் மீது கடும்கோபம். அதற்கு ஒரு பாடம் கற்பிக்க விரும்பினேன். ஒரு கைத்தடியினால் அதுக்குக் கடுமையான அறை கொடுத்தேன்.

நான் ராணியை அதிக சிரத்தையுடன் கவனிக்கலானேன்.

ஒரு ஞாயிறு பிற்பகல், நான் ராகுலனை ஒரு மரத்தில் கட்டிவிட்டு, தூங்குவதற்காக வீட்டினுள் வந்தேன். நான் தலையணையில் தலை சாய்த்திருப்பேன்; அதற்குள் ராணி அலறுவதை கேட்டேன். வெளியே ஒடினேன். நான் பார்த்தது என் வயிற்றை கலக்கியது. ராகுலன் ராணியைப் பற்களால் கவவி, அதை முரட்டுத்தனமாக, வண்ணான் துணியைக் கல் மீது அறைவது போல், தரை மீது அடித்துக் கொண்டிருந்தது. ராணியின் கதறல்கள் மெலிந்து தேய்ந்தன. ராகுலனின் கண்கள் பொறாமையால், கோபத்தால், பழிவாங்கும் உணர்வால் தகித்தன. அதன் அருகில் போவதற்கே நான் பயந்தேன்.

நான் சென்னாவை, அம்மாவை, பாட்டியைக் கூவி அழைத்தேன். அவர்கள் ஒடி வந்தார்கள். "சென்னா ராணியைக் காப்பாற்று. ராகுலன் அதைக் கொன்று போடும்" என்று கத்தினேன். சென்னா ராகுலனிடம் ஒடி, அதுக்கு ஒங்கி ஒரு உதை கொடுத்தான். ராகுலன் உருண்டு விழுந்தது. ராணியை விட்டுவிட்டது. ராணி ரத்தத்தில் தோய்ந்திருந்தது. ராகுலன் அதன் அடிவயிற்றை கடித்துக் குதறியிருந்தது. ராணி வேதனையால் முனகியது. பிறகு அசைவற்றுக் கிடந்தது.

ராகுலனின் நாக்கிலிருந்து ரத்தம் சொட்டியது. நான் அதன் பக்கம் திரும்பியதும் அது வாலை ஆட்டியது. ராணியின் அசைவற்ற உடலைப் பார்த்தது. அது தனது செயலில் மகிழ்வு அடைந்ததாகத் தோன்றியது.

"சென்னா, ராகுலனை அவிழ்த்து விட்டது யார்? நான் அதைக் கட்டியிருந்தேனே."

சென்னா குற்ற உணர்வோடு சொன்னான்: "அதைக் குளிப்பாட்ட வேண்டியிருந்தது. அவிழ்த்து விட்டு, சோப்புக்காக உள்ளே வந்தேன். நான் திரும்புவதற்குள் அது அந்தப் பிராணியை கொன்றுவிட்டது."

நான் ராகுலனிடம் ஆத்திரம் கொண்டேன். அதை அடிப்பதற்காக முன்நகர்ந்தேன்.

"அதன் பக்கத்தில் போகாதே. அதுக்குப் பைத்தியம். அது உன்னைக் கடித்துவிடும்" என்று அம்மா அலறினாள்.

71