சுந்தரும் புள்ளிவால் பசுவும்
காரூர் நீலகண்ட பிள்ளை
பன்னிரண்டு வயது சுந்தர் ஊர்ப்பசுக்களை மேய்த்தான். அவன் உழைப்புக்காகச் சோறும் கறியும் அவனுக்குக் கிடைத்தன.
கோடையில் ஒருநாள் அதிகாலையில் அவன் மூன்று பசுக்களை மேய்ச்சலுக்கு இட்டுச் சென்றான். 'சுருள் கொம்பு', 'கருங்கண்', 'புள்ளி வால்' என்று அவன் அவற்றுக்குப் பெயரிட்டிருந்தான். தனது உணவை ஒருபையில் வைத்து, அதைத் தன் தோளில் தொங்கவிட்டிருந்தான். அந்தப் பையில் அவனது கத்தியும் குழலும் இருந்தன. அவன் ஒரு கொம்பைக் கொண்டு பசுக்களை தூரத்திலிருந்த மேய்ச்சல் நிலத்துக்கு ஒட்டிச் சென்றான்.
மேய்ச்சல் தளம் பலவித மரங்களும் செடிகளும் மண்டி வளர்ந்த விசாலமான நிலப்பரப்பு. இவ்வருடம் வறட்சி ஏற்பட்டிருந்தது. எல்லாம் காய்ந்து கிடந்தன. மாடுகள் தின்பதற்கு அதிகமாக இல்லை. அவை கடிப்பதற்குச் சிறிது இலைகளே எஞ்சியிருந்தன.
மாடுகளை சுந்தர் அடிக்கடி மேய்க்கக் கொண்டுபோக நேராது. மழை பெய்தால், மாடுகள் தொழுக்களில் தங்கிவிடும். விளைச்சல் நன்றாக இருந்தால் அவன் உழைப்பு தேவைப்படாது; மாடுகள் வயல்களில் நெல் தாள்களைத் தாமே தின்று கொள்ளும் கோடை காலத்தில், மாடுகளுக்குத் தீவனம் அரிதாகிவிடும்போது தான், சுந்தர் அவற்றை மேய்ச்சலுக்கு இட்டுச் செல்ல நேரிடும். இதுவும் பதினைந்து நாட்களுக்கு மேல் போகாது. ஆனால் இதற்குள் சுந்தர் மாடுகளோடு மிக ஒட்டுதலாகி விடுவான்.
மேய்ச்சல் களத்தின் அருகில் வளமான காடு ஒன்று உண்டு. அங்கு நாலாவித மரங்களும் அடர்ந்து, பலவகைப் பிராணிகளுக்கும்-நரிகள், குரங்குகள், முள்ளம்பன்றி, முயல், காட்டுப்பன்றி, மான்கள் அனைத்துக்கும்-பாதுகாப்புத் தந்தன. அவ்வப்போது யானைகளும் தென்படும். ஆனால், காடு அரசின் காவலில் இருந்தது. அங்கு மேய்ச்சல் அனுமதிக்கப் படுவதில்லை.