பக்கம்:சிறந்த பதின்மூன்று சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெளி என அழைக்கப்படும் இனம்புரியா இருட்டினுள் புகுவதற்கு ஒருவனுக்கு ராக்கெட் தேவை.

நான் ராக்கெட்டுகள் பற்றிக் கனவு கண்ட சமயத்தில் தான் என் பார்வையில் பத்திரிகை விளம்பரம் பட்டது.

எனக்கு அழைப்பு வந்ததும் நான் பம்பாய் போனேன்.

அவ்வேலைக்கு விண்ணப்பித்தவர்கள் வரிசையை கண்டதும் என் உற்சாகம் குன்றியது. நாட்டின் நாலு மூலைகளிலிருந்தும் அவர்கள் வந்திருந்தனர். நான் அவர்களுடன் கைகுலுக்கியபோது என் உள்ளம் படுத்துவிட்டது. அவர்கள் அனைவரும் சரியான ராட்சதர்களாகத் தோன்றினார்கள்-உடலைப் பேணியவர்கள், மல்யுத்த வீரர்கள், பளு தூக்கும் பயில்வான்கள்! ஒப்பு நோக்கினால் நான் சரியான நோஞ்சான்.

ராட்சதர்கள் என் கையைக் குலுக்கி, என்னை மேலும் கீழும் பார்த்து, கேலியாகச் சிரித்தார்கள். நான் நெட்டையன் இல்லை, எனக்குத் தெரியும். ஆனால் அவர்கள் வெறுப்பு என்னை நெஞ்சு நிமிர வைத்தது.

எனது தகுதிகளை நான் என் மனசில் கணக்கிட்டேன். நான் நல்ல விளையாட்டு வீரன். ஆண்டு தோறும் கல்லூரியில் நான் பரிசுகள் பெற்றிருந்தேன். ஆனால், அது பொருத்தமில்லாத விஷயமாகலாம். நான் வேறொரு தகுதியும் பெற்றிருந்தேன். பல வருடங்களுக்கு முன் ஒரு ஆசிரியரிடம் நான் பிராணாயாமம் மற்றும் ஆசனங்களில் கடுமையான பயிற்சி பெற்றிருந்தேன். மூச்சுவிடுவதையும் உட்காருவதையும் கட்டுப்படுத்தும் இப்பயிற்சிகள் பண்டைய ரிஷிகளிடமிருந்து வந்தவை. இந்தப் பயிற்சி எனக்கு நம்பிக்கை தந்தது. ராட்சதர்களோ, ராட்சதர்கள் இல்லையோ அவர்களிடையே என்னால் தாக்குப் பிடிக்க முடியும்.

டாங்! எங்கோ மணி அடித்தது. டாக்டர் போல் உடை தரித்த ஒருவர் திடீரென வந்தார். எங்களை சோதனைப் பிராணிகளைப் போல் ஒரு ஆய்வுக் கூடத்தினுள் இட்டுச் சென்றார்.

கையை நீட்டி, அவர் சொன்னார்: "இந்த பெட்டிகளைப் பாருங்கள்" - சொர்க்கத்துக்கு இட்டுச் செல்லும் ஏழு படிகள். இவற்றில் நீங்கள் ஏறமுடிந்தால், நீங்கள் சொர்க்கத்தின் கதவை, ஏன் அதற்கு அப்பாலும் கூட, தட்ட இயலும். ஆரம்பப்பயிற்சியில் வெற்றி பெறும் நபர் விண்வெளியில் பறப்பதற்குத் தேர்வு செய்யப்படுவார். இப்போ பாருங்கள்."

டாக்டரின் செயல் விளக்கத்தைப் பின்பற்றுவதற்கு முன்னரே, நான் இனம்புரியாப் பகுதிக்குள் தள்ளப்பட்டேன்.

ஒரு கதவு அடைபட்டது. சட்டென்று ஒரு சிவப்பு விளக்கு அணைக்கப்பட்டது. நான் விழுவதை உணர்ந்தேன். ஒரு பூதத்தின் வயிற்றுக்குள் நேராக விழுந்தேன்! எங்கும் கும்மிருட்டு ஆழ்ந்த மெளனம்! என்

92