5
இதனை நான் சொல்வதினும் நாம் வாழும் உலகம் நாள்தோறும் சொல்லித் தருகிறது. நமது முன்னோர்களும் தமது பட்டறிவுப் பாடங்களை ஏட்டிலே பதித்து வைத்துள்ளனர். வாழும் வழியினைக் காட்டியுள்ளனர். அதன் சாறம் வாழ்க்கையின் உயர்வும் இன்பமும் உன் அகத்தேதான் வகுக்கப்படுகின்றது என்பதாகும்.
மேலை நாட்டு இலக்கியங்களினும் கீழை நாட்டு இலக்கியங்கள் அறம்-பொருள் இன்பத்தை மிகுதியாகப் போதிப்பன. அப்படி இருந்தும் வாழ்க்கை நிலையிலும் தரத்திலும் வளமையிலும் வளரா நிலையில் இந்தியத் தமிழகம் இருப்பது வருந்தத் தக்கதாகும். அதுவும்: காரல்மார்க்சின் நூலினும் மேலான ஒரு திருக்குறள் நூல் நமக்கு வழிகாட்டியாக இருந்தும் நாம் வாழ்வில் சிறக்காதது பலரை வருத்தியுள்ளது. எனவேதான் பலர் தனி மனித வாழ்வும், சமூகமும் வளரப் பல நூல்களைத் தொடர்ந்து எழுதித் தருகின்றனர். ஆனால் அவை பெரும்பாலும் தம் தம் பட்டறிவால்-நுகர்வறிவால்-அனுபவத்தால் எழுதப்பட்டவை அல்ல. அவை பெரிதும் ஆங்கில நூல்களின் தழுவல்கள்தாம். தமிழ் நூல்களைக் கற்றும் வாழ்ந்தும் பெற்ற பாடங்களைத் தந்தவர்கள் விரல்விட்டு எண்ணிவிடலாம்.
அன்பு, அறிவு, உழைப்பு, ஒழுக்கம் இவற்றுள் அடங்கியதே முழுமையான வாழ்வு என்பதைத் தம்முடைய ஐம்பதாண்டு கால உலக வாழ்வனுபவத்தையும்