பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

77

நல்லவற்றை நாம் தவறாகப் பயன்படுத்தும் போது அவற்றை இழக்கிறோம். இனிமையாகத் தென்படுவதும் கசப்பாகி விடுகின்றன. அதனால் வலியும் வேதனையும் இன்பமற்றுத் துன்பத்தில் முடிகின்றன.

எனவே எதையும் சீராக நல்ல முறையில் பயன்படுத்து. காதல் இன்பம் பெறத் துடித்து, வெற்றிகண்ட பிறகு வருந்துவதும் வெறுப்பதும் எதிர்பார்க்கக் கூடியதுதான். உன் வாழ்க்கைத் துணைவியிடம் நல்லுறவு கொண்டு அவளைப் போற்றிப் பாராட்டி உன் இன்பத்தை நிலையான தாக அமைத்துக்கொள். அப்போதுதான் காதல் வாழ்வில் குழப்பமோ, சண்டை சச்சரவுகளோ இல்லாமல் அமைதியுடன் வாழ முடியும்.

இயற்கை உனக்கு நல்லதைத் தரும்போது அதனுடன் அல்லதையும் கலந்துதான் தருகிறது. அதே நேரத்தில் கேட்டைத் தவிர்த்துக்கொள்ளவும் உனக்கு வழி வகுத்திருக்கிறது. இன்பத்துடன் இணைந்திருப்பதே துன்பம். துன்பத்திலும் இன்பம் கலந்திருக்கிறது. மகிழ்ச்சியும், துக்கமும் ஒன்றுதான். நாம்தான் விழிப்புடன் வேண்டியதை அமைத்துக் கொள்ள வேண்டும்.

கவலைப்படுவதிலும் இன்பம் இருக்கிறது. அளவு கடந்த மகிழ்ச்சியில் கண்ணீரும் கலந்திருக்கிறது.