பக்கம்:சிறந்த வாழ்வுக்குச் சில யோசனைகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

சிறந்த வாழ்வுக்குச் சில சிந்தனைகள்

முட்டாளின் கைகளில் சிக்கிய நல்லவை அழிகின்றன. அறிவாளிகள் அல்லனவற்றைக் கடட நல்லனவாக மாற்றக் கட்டியவர்கள்.

எனவே பலவீனமும், பலமும் உன்னிடம் கலந்திருப்பதை நீ மறந்து விடாதே.

உயர்வான ஒழுக்கங்கள் பல உயர்வானவர்களிடம் பகிர்ந்து காணப்படுகின்றன. உன் கைக்கு எட்டாததை விரும்பாதே. அதெல்லாம் உனக்குக் கிடைக்கவில்லையே என்று வருந்தாதே.

அறிவுடைய செல்வர்களின் தாராள குணம் உனக்கு உடனே வந்து விடுமா? வறுமையில் ஏழைகள் மனநிறைவு கொள்வதுபோல் உன்னால் முடியுமா? விதவையிடம் உள்ள பட்டறிவு உன் மனைவிடம் காணப்படவில்லை என்றால் அவளை நீ வெறுத்து ஒதுக்க முடியுமா? பிளவுபட்டிருக்கும் நாட்டில் உன் தந்தையும் ஈடுபாடு கொண்டால், அவரை நீ காப்பாற்ற முடியுமா? நீ கடமையுடன் செயல்படுவதன் மூலமே அவரைக் காக்க முடியும்.

உண்மை எப்போதும் ஒன்றுதான். ஐயப்பாட்டினை உண்டாக்கிக் கொள்பவன் நீயேதான். எப்போதும் உன் மனச்சான்றுக்குக் கட்டுப்பட்டு நட. உனக்கு எல்லாம் நல்லவையாய் நடக்கும்.