பக்கம்:சிறுவர்க்குச் சுதந்திரம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



8


“அவங்கவங்க சுதந்திரமா இருப்பதுதானே சுதந்திரம்! தினசரி தவறாம பள்ளிக்கூடம் போறோம். பள்ளிக்குப் போகும் வரைக்கும் வீட்டில் ஒரே கெடுபிடி. குளி! சாப்பிடு!’ன்னு அம்மாவின் ஒரே அதட்டல். ‘வீட்டுப் பாடத்தைப் படி, கணக்கைப் போடு’ன்னு அப்பாவின் மிரட்டல். ஒரு நிமிடம்கூட சும்மா இருக்கவிடாம உயிரை வாங்குறாங்க.”

“பள்ளிக்கூடம் போனால் அங்கே ஆசிரியரின் கெடுபிடி. ‘அதைப் படி, இதை எழுது’ன்னு பிழிஞ்சு எடுக்கிறார். சுருக்கமா சொன்னால் வீட்டிலேயும் விடுதலை இல்லை; பள்ளிக்கூடத்திலும் சுதந்திரம் இல்லை. இரண்டு இடத்திலும் ஆட்டிப் படைக்கிறாங்க. அடிமையாய் நடத்தறாங்க. நம்ம இஷ்டத்துக்கு நடக்க முடியலே. விருப்பத்துக்கு வெளியே போக முடியலே. வெளியிலே சுற்றவோ, விளையாடவோ விடறதில்லே. சுதந்திர தினமான இன்னிக்காவது வழக்கமான வேலை எதுவும் நான் செய்யப் போறதில்லை. என் இஷ்டப்படி திரிந்து விளையாடப் போறேன்!”

தன் மனதில் உள்ளதையெல்லாம் கொட்டினான் மணி. சுதந்திரத்துக்கு அவன் கொண்டிருந்த பொருள் வேறாக இருந்தது, அவன் விழாவுக்கு வராமல் அடம்பிடிப்பது கோமதிக்குச் சங்கடமாக இருந்தது.