பக்கம்:சிறுவர்க்குச் சுதந்திரம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



16


கோமதியின் பேச்சு மணியை சீண்டுவது போல் இருந்தது. அவன் கோமதியை வெறுப்போடு பார்த்தான். அவன் முகத்தில் வருத்தமும் ஏக்கமும் மாறி மாறி தோன்றின. நிலைமையை ஒரளவு புரிந்து கொண்ட மாமா மேலும் விளக்க முயன்றார்.

“சுதந்திரம்’னா’ எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் தான்தோன்றித் தனமாக அலைவது’ என்று தவறாக நினைத்திருக்கிறான், மணி. இந்த நாளை நாம் ஏன் சுதந்திர தினம்’னு சொல்றோம்?”

மாமாவின் கேள்விக்கு ரகு பதில் கூற முற்பட்டான்.

“இது எல்லோருக்கும் தெரிந்ததுதானே, மாமா! நம் நாட்டை வெள்ளையர் அடிமைப்படுத்தி ஆண்டாங்க. அவர்களிடமிருந்து விடுதலை பெற நீண்ட நாள் போராடி, சுதந்திரம் வாங்கினோம். நம்மை நாமே ஆள உரிமை பெற்ற அந்த நாளைத்தான் ஆண்டுதோறும் கொடியேற்றிக் கொண்டாடுகிறோம்.”

விடுதலை வரலாற்றை சுருக்கமாகக் கூறி முடித்தான் ரகு.