பக்கம்:சிறுவர்க்குச் சுதந்திரம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



17


“சரியாகச் சொன்னாய் ரகு. பெற்ற இந்த உரிமையைப் பேணிக் காக்கணும். இதற்காக அவரவர் கடமையைத் தெரிந்து கொள்ளவேண்டும். அந்தக் கடமைகளைத் தவறாமல் செய்ய வேண்டும். அப்போதுதான் நம் சுதந்திரம் நிலைக்கும்.”

மாமா கூறியது கோமதிக்குச் சரியாகப் புரியவில்லை. அவள் தலையைச் சொறிந்தபடி “கொஞ்சம் புரியும்படியாகச் சொல்லுங்க, மாமா” என்று கேட்டுக் கொண்டாள். அவரும் தொடர்ந்து விளக்கிச் சொல்லலானார்.

“அதாவது, நம்மை அடிமைப்படுத்தியிருந்த வெள்ளைக்காரர்களிடமிருந்து போராடினோம். அதன் விளைவாக நம்மை நாமே ஆண்டு கொள்ள உரிமை பெற்றோம், இல்லையா? இந்த உரிமை மீண்டும் பறிபோகாமல் இருக்கவேண்டும். அதற்காக நமக்குள்ள கடமைகளைத் தவறாமல் செய்ய வேண்டும். அப்போதுதான் நம்ம உரிமை நிலைக்கும். நாமும் என்றென்றும் சுதந்திர மக்களாக இருக்க முடியும். அப்போது தான் நம் நாடும் முன்னேற முடியும்.”

இன்னும் ரகுவுக்குச் சந்தேகம் முழுக்கத் தீர்ந்தபாடில்லை.