பக்கம்:சிறுவர்க்குச் சுதந்திரம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோமதிக்கு ஒருபுறம் குதூகலம்; மறுபுறம் ஒரே பரபரப்பு. அன்று சுதந்திரநாள். பள்ளியில் தேசியக் கொடியேற்று விழா நடைபெற விருந்தது. சற்று முன்னதாகவே செல்ல விரும்பினாள். அதற்காக விரைந்து குளித்தாள். புத்தாடை அணிந்தாள். தன்னை முழுமையாக அழகுபடுத்திக் கொண்டாள். விழாவுக்குப் புறப்பட்டாள். அவள் தம்பி ரகுவும் புறப்படத் தயாரானான். ஆனால் மற்றொரு தம்பி மணி? இன்னும் தயாரானதாகத் தெரியவில்லை. அவனையும் அங்கே காணோம்.

கோமதி வீடெங்கும் மணியைத் தேடினாள். எங்கும் காணோம். வீட்டின் பின்கட்டுக்குச் சென்றாள். அங்கே அவன் இருந்தான். சாவதானமாக விளையாடிக் கொண்டிருந்தான். இன்னும் குளிக்கவில்லை. புது உடை உடுத்த வில்லை. கொடியேற்று விழாவுக்குப் புறப்படுபவன்போல் தோன்றவில்லை.

இவர்களைத் தேடிக்கொண்டு ரகு அங்கே வந்தான். அவன் அலங்காரம் ‘அவன் தயார்’ என்பதைக் காட்டியது.