பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

இந்திய மொழிகளிலேயே முதன்முதலாகக் கலைக்களஞ்சியங்கள் தமிழ் மொழியிலேதான் வெளிவந்தன அதையொட்டி ‘குழந்தைகள் கலைக்களஞ்சியம்' பத்து தொகுதிகள் வெளியிடப்பட்டன. வெகு விரைவிலேயே அவை மீண்டும் திருத்திய பதிப்புகளாக வெளிவந்தன.

ஒருவர் கலைக்களஞ்சியத்தை ‘அ’ முதல் ‘ன’ வரை படித்தறிய விரும்பினால் அவர் 10 தொகுதிகளையும் புரட்டிப்பார்க்க வேண்டியதாகிறது. சுருங்கிய வடிவில் கையடக்கமாக ஒரே தொகுதியாக இருப்பின் அஃது படிக்கும் இளம் மாணவர்கட்கும் ஆசிரியர்கட்கும் மிகுபயன் விளைவிக்கும் என்ற கருத்தை ஒருசமயம் தமிழ்நாடு அரசு கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு பேராசிரியர் டாக்டர் க. அன்பழகன் அவர்கள் வெளிப்படுத்தினார்.

காலத்திகேற்ப, தேவையின் அடிப்படையில் தமிழ் விரைந்து வளர வேண்டும், வளம் பெறவேண்டும் என்பதிலே பேரார்வம் கொண்ட அமைச்சர் அவர்கள், ‘அ’ முதல் ‘ன’ இறுவாய் அடங்கும் வகையில் ஒரே தொகுதியாக தொகுக்கும் முயற்சியில் ஈடுபடுமாறு என்னைத் தூண்டினார்கள். அவர்களின் அரிய ஆலோசனையும் காட்டிய ஆர்வமும் எனக்குப் பெரும் உந்து சக்தியாக அமைய, தொகுப்பு முயற்சியில் ஈடுபடலானேன். குழந்தைகள் கலைக் களஞ்சியத் தொகுதிகளின் அடிப்படையிலேயே இதைத் தொகுக்கலானேன். அதற்காக நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன்.

பள்ளி மாணவர்களுக்கு எளிதாக இருக்கும் பொருட்டு எளிய, இனிய எழுத்து நடை இதில் கையாளப்பட்டுள்ளது. ஆழிய கருத்து நுட்பப் பொருள்களும் எளிய சொற்றொடர் மூலம் விளக்கப்பட்டுள்ளது.

நல்ல தாளில் பட விளக்கங்களோடு கூடிய இந்நூல் மாணவ சமுதாயத்தின் அறிவு வளர்ச்சிக்குப் பெரு துணையாயமையும் என்பதில் ஐயமில்லை.

இந்நூலை அழகிய முறையில் குறுகிய காலத்தில் அச்சுப் படிவம் வடித்துத் தந்த திருமதி சித்தை சௌதா அவர்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.

இந்தத் தொகுதி உருவாக முழுமுதற் காரணமாய் அமைந்த கல்வியமைச்சர் மாண்புமிகு பேராசிரியர் டாக்டர் க. அன்பழகனார் அவர்கள் இந்நூலுக்கு அரிய வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்துள்ளார். அவர்கட்கு நான் என்றும் நன்றிக் கடன்பட்டவனாக உள்ளேன்.

அன்பன்

மணவை முஸ்தபா

தொகுப்பு ஆசிரியர்