பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

முறையில் ஒப்பனை செய்யப்பட்டது. நகரம் எங்கும் தோரணங்கள் கட்டப்பட்டன. ஊர்ச் சிறுவர் அரங்கின் ஒப்பனையைக் காணக் காலை முதல் அணியணியாக வந்து கொண்டிருந்தனர். அன்று நகரம் எங்கும் ஒரே பரபரப்பாகக் காணப்பட்டது. கணிகையர் தெருக்களில் இருந்த கணிகையர் அனைவரும் நடன மண்டபத்திற் கூடிவிட்டனர். குறித்த நேரத்திற்கு முன்பே நகரத்தில் இருந்த பிரபுக்கள். அரசியல் அலுவலர்கள், வணிகப் பெருமக்கள் முதலியோர் மண்டபத்தில் குழுமி இருந்தனர்.

மாதவி அலங்காரம்

அந்த நல்ல நாளில் சித்திராபதி தன் குல தெய்வத்திற்குப் பூசையிட்டாள்; தன் தவமகளான மாதவி அன்று அவையிற் சிறப்புப் பெற வேண்டும். என்று தெய்வத்தை வேண்டினாள்; மாதவியை மங்கல நீரில் நீராட்டினாள்; நடிக மாதர் அணியத் தக்க நவமணி மாலைகளையும் பிற உயர்ந்த நகைகளையும் அணிவித்தாள்; உயர்ந்த பட்டாடையை இடையிற் சுற்றினாள்; இவ்வாறு கண்டார் வியந்து பாராட்டத்தக்க முறையில் சிறந்த ஒப்பனை செய்வித்தாள்.

நடன மேடை

அரங்கேற்றத்திற்குக் குறித்த நேரம் வந்தது சோழ வேந்தன் தலைமையில் பேரவை கூடியது. யாவரும் ஆவலோடு மேடையை நோக்கினர். அங்குப் புகழ்பெற்ற சித்திராபதி தோன்றினாள். அவளுடன் இசை ஆசிரியன், மத்தளம்,யாழ், குழல் முதலிய பல வகை வாத்தியம் வல்லுநர் காட்சி