பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

மாதவியின் நடனச் சிறப்பைப் பாராட்டிப் பேசிக் கொண்டு இருந்தான். அப்பொழுது அங்குச் சித்திராபதி அனுப்பிய தோழி ஒருத்தி வந்தாள். அவள் கையிற் சோழ அரசன் மாதவிக்குப் பரிசளித்த மாலை இருந்தது. அவள் “இதனை ஆயிரத்தெண்கழஞ்சு பொன் தந்து விலையாகப் பெறுபவர் மாதவிக்குக் கணவராகத் தகுவர்” என்றாள். ஊழ்வினை வசத்தால் கோவலன் ஆயிரத்து எண் கழஞ்சு பொன்னைத் தந்து அந்த மாலையை வாங்கிக் கொண்டான்; அத்தோழியுடன் மாதவியின் மாளிகையை அடைந்தான்; தான் வாங்கிய மாலையை அவள் கழுத்தில் அணிவித்து மகிழ்ந்தான்; அன்றுமுதல் மாதவியுடன் உறைவான் ஆயினன்.

கணவனைப் பிரிந்த கண்ணகி

தன் உயிர் அனைய காதலன் மாதவி என்னும் நாடக மகளுடன் நட்புக் கொண்டதைக் கண்ணகி அறிந்தாள். அவள் மனம் என்ன பாடுபட்டிருக்கு.? அவள் காதலன் பிரிந்த நாள் முதல் கால்களில் சிலம்பை அணிவதில்லை; மேகலாபரணத்தைக் கழற்றிவிட்டாள். அவள் காதுகள் குழைகளைத் துறந்தன; செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறந்தது; ஒளி பொருந்திய நெற்றி திலகப் பொட்டை இழந்தது; நீண்ட கருங்கூந்தல் எண் ணெயையும் பூவினையும் மறந்தது; அவள் கண்கள் உறக்கத்தை மறந்தன; அவளது புன்னகையைக் கோவலன் இழந்தான். கண்ணகி சிறந்த கற்புடைய மங்கை ஆதலின், கணவன் இல்லாவிடினும் இல்லற நெறி வழுவாமல் இருந்து வந்தாள்; விருந்தினரை உபசரித்தாள்; தன்னை