பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39

அநுபவிக்கும் பொழுது செயலற்று வருந்துகின்றனர். கற்க வேண்டியவற்றைக் கற்று, அவற்றின் பயனை உணர்ந்த பெரியோர், தீவினைப் பயனாகிய துன்பத்தை அநுபவிக்கும் பொழுது, அதற்காக வருந்தார், இது நாம் செய்த தீவினையால் வந்தது’ என்று எண்ணிக் கொள்வார் இத்துன்பம் யாரை விட்டது.

“இராமன் பட்ட பாட்டை நீ அறிவாயா?” அவன் சீதைக்காக வில்லை வளைத்த துன்பம், பின்னர் அவளைப் பிரிந்ததால் வந்த துன்பம் முதலியவற்றை நீ அறிவாய் அல்லவா! நீ நளன் வரலாற்றை அறிவாய அல்லவா? அவன் சூதாடியது-தன மனைவியுடன் காடு சென்றது-அவளை நள் இருளில் விட்டுப் பிரிந்தது-விஷத்தால் உடல் கரிந்து விகாரத் தோற்றத்தில் இருந்தது முதலியன துன்புறு செயல்கள் அல்லவா? இவை யாவும் தீவினை வசத்தால் வந்தனவாகும். இராமனும் நளனும் தம் நாடு நீங்கிப் புதிய இடங்கள் பலவற்றுக்கும் சென்று சொல்லொணாத் துன்பம் உற்றனர். அவர்களைப்போல நீயும், உற்றார் உறவினரை விட்டுப் புதிய இடத்திற்கு வந்தனை; ஆயினும் நீ இவர்களைப்போல மனைவியை விட்டு பிரியவில்லை என்பதை நினைவிற்கொள். நீ அந்த முறையில் பாக்கியவானே ஆவாய், நீ இனி வருந்தாதே; பாண்டியனது கூடல் நகரத்தில் தங்கி வாணிகம் செய்து வாழ்வு பெறுவாயாக, என்று வாழ்த்தினார்.

மாடலன் வாழ்த்துரை

இவ்வாறு கோவலன் மாதவர் ஆசிரமத்தில் தங்கி இருக்கையில் மாடலன் என்ற மறையவன் அங்கு வந்தான். அவன் பொதிய மலையை வலம்