பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

அன்புடன் நோக்கி, “நீ குற்றமற்ற முதியவள் உன்னிடம் என் மக்கள் அனைய இவ்விருவரையும் ஒப்படைக்கின்றேன். இவர்கள் பூம்புகார் வணிகப் பெருமக்கள் மரபினர். ஊழ்வலியால் இங்கு வாணிகம் செய்து பிழைக்க வந்துளர். இரண்டொரு நாள் வரை நின் பாதுகாவலில் இருப்பர்; பின்னர் வேறு இடம் பார்த்துச் செல்வர். அதுவரை இவ்விளை யாளைப் பாதுகாத்தல் நினது கடமையாகும்,” என்றார். மாதரி அதற்கு இசைந்து கோவலனையும் கண்ணகியையும் அழைத்துச் சென்றாள்.

பிரியா விடை

மறுநாள் கண்ணகி தன் கையால் புதிய மட் கலங்களில் சமையல் செய்தாள்; அன்று கோவவன் மிக்க மகிழ்ச்சியுடன் உண்டான்; சிறந்த பத்தினியாகிய அவளை மனம் வருந்தவிட்டு மாதவியுடன் வாழ்ந்ததை எண்ணி வருந்தினான்; வருந்தி, அவளது அன்பிற்கு உள்ளம் உருகி,


“குடிமுதல் சுற்றமும் குற்றினை யோரும்
அடியோர் பாங்கும் ஆயமும் நீங்கி
நாணமும் மடனும் நல்லோர் ஏத்தும்
பேணிய கற்பும் பெருந்துணை யாக
என்னோடு போந்தீங்கு என்துயர் சளைந்த
பொன்னே!கொடியே! புனைபூங் கோதாய்!
நாணின் பாவாய்! நீள் நில விளக்கே!
கற்பின் கொழுந்தே; பொற்பின் செல்வி!"

என்று அவளைப் பலவாறு பாராட்டினான்; பின்னர் அவளது சிலம்புகளில் ஒன்றைப் பெற்று, அவளிடம் பிரியாவிடை பெற்றுச் சென்றான்.