பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

57


இக்காட்சிகளைக் கண்டும் கண்ணகிக்குச் சீற்றம் தணியவில்லை. அவள், வீழ்ந்த அரசியைக் கண்டு, “அம்மையே, நான் பத்தினிமார் பிறந்த பதியிற் பிறந்தவள். நான் ஒரு பத்தினி என்பது உண்மையாயின், இந்த அரசனுடன் மதுரையை யும் அழிப்பேன்,” என்று வஞ்சினம் கூறினாள்.


12. கண்ணகி விண்ணகம் புகுதல்

மதுரை தீப்பிடித்தல்

மதுரையை அழிப்பதாக வஞ்சினம் கூறிய கண்ணகி. "மதுரை மாநகரத்தில் உள்ள பத்தினிகளே, குற்றமற்ற பெருமக்களே, தெய்வங்காள், மாதவர்களே, கேளுங்கள்; எனது குற்றமற்ற காதலனுக்குத் தவறு இழைத்த இக் கோ நகரைச் சீறினேன்; யான் குற்றம் இல்லாதவள்” என்று கூறினாள்; தனது இடப்பக்க மார்பை வலக் கையால் திருகினாள்; நகரத்தை மும்முறை வலம் வந்தாள்; திருகிய மார்பை வட்டித்து எறிந்தாள். உடனே பீடு மிக்க மாட மதுரையில் பெருந் தீப் பற்றிக் கொண்டது.

பாண்டியன் அரண்மனை தீப்பற்றிக் கொண்டது. அதனுள் முன்னரே இறந்து கிடந்த பாண்டியன் உடலமும் அவனது கோப்பெருந் தேவியின் உடலம் எரிந்து சாம்பராயின. அழகிய பல கட்டடங்கள் எரிந்து பாழ்பட்டன. பத்தினி ஏவிய தீயாதலால் அது மதுரையில் இருந்த அந்தணர், பத்தினிகள், நல்லோர், குழந்தைகள் முதலியவரை விட்டுத் தீத்திறத்தார் பக்கமே சார்ந்தது. அவர் அனைவரும் பூம்புகார்ப்பத்தினியைத் தெய்வமாகப் போற்றினர்.