பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

67

மாநகரத்திலிருந்து வடக்கு நோக்கில் புறப்பட்டான். அவன் சிறந்த சிவபக்தன்; சிவபிரான் அருளால் பிறந்தவன்; ஆதலின் சிவபெருமானைப் பூசித்துப புறப்பட்டான். வஞ்சி மாநகரத்து மக்கள், “எங்கள் பெருமான் வெற்றி பெற்று மீள்வானாக” என்று வாழ்த்தி வழியனுப்பினர். அப்பொழுது திருமால் பிரசாதம் சேர வேந்தனுக்குக் கொடுக்கப்பட்டது. செங்குட்டுவன் தன் படைகள் புடைசூழ இமயம் நோக்கிச் செல்லலானான்.

சேரன் வழிநெடுக இயற்கைக் காட்சிகளைக் கண்டுகொண்டே சென்றான்; படைவீரர் தம் அரசர் பெருமான்னப் பற்றிய வீரப் பாடல்களை யும் சேர நாட்டுப் பழமை-வீரம்-சிறப்புமுதலியவற்றை விளக்கும் நாட்டுப் பாடல்களை யும் பாடிக் கொண்டு அணியணியாகச் சென்றனர். குதிரைப் படைகளின் செலவினால் கிளம்பிய புழுதி மேல் எழும்பி மேகங்கள் எனப் படர்ந்தன. வீரர் ஏந்திய ஈட்டிகளின் பளபளப்புத் தூரத்தில் இருந்து காண்போர்க்கு மின்னலைப் போலக் காட்சி அளித்தது,

நீலகிரியில் தங்கல்

சேரர் பெருந்தகை இங்ஙனம் சென்று நீலகிரியில் இளைப்பாறத் தங்கினான், அங்குச் சில நாட்கள் இருந்தான். அவன் அங்குத் தங்கப் போவதை முன்னரே அறிந்த சுற்றுப்புற நாட்டரசர் தத்தம் உத்தியோகஸ்தர் மூலமாகப் பலவகை விலை உயர்ந்த பொருள்களைச் சேரனுக்குப் பரிசாக அளித்து மகிழ்ந்தனர். பல நாட்டு நாடக மகளிரும் ஆடு மகளிரும் பாடு மகளிரும் தத்தம் பரிவாரங்-