பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72


பல நாடுகளில் பத்தினிக் கோவில்

செங்குட்டுவன் தேவந்தி என்ற பார்ப்பனத் தோழியைப் பத்தினிக் கோவிலில் இருந்து நாளும் பூசை செய்து வருமாறு ஏற்பாடு செய்தான். பூசை, விழா இவற்றுக்குக் குறைவு நேராதபடி பெரும் பெரும் நிலங்களும், தேவதானமாக விட்டான். அக்கோயில் அன்று முதல் ‘பத்தினிக் கோயில்’ எனப் பெயர் பெற்றது. மாளுவ மன்னர் தம் நாட்டில் கட்டிய கோயிலுக்கு இப்பெயரே இட்டனர். அப்பெயர் நாளடைவில் மருவி இன்று ‘பைதனி கோயில் என்று வழங்குகிறது. கயவாகு மன்னன் பத்தினிக்கு எடுப்பித்த சிலை இன்று லண்டனில் உள்ள பிரிட்டிஷ் பொருட்காட்சிச் சாலையில் இருக்கின்றது.


15. சிலப்பதிகாரம்

இளங்கோ அடிகளும் சாத்தனாரும்

பத்தினி விழாப் பாங்குற முடிந்தது. கனகவிசயர் செறுக்கு அடங்கிச் சேரனைப் பணிந்து விடைப் பெற்று தம் நாடு சென்றனர். தமிழ்நாடு எங்கனும் பத்தினியின் பெயர் பரவியது தமிழ் மக்கள் பத்தினியைக் கண் கண்ட தெய்வமாகக் கொண்டாடினர். சேரர் பெருமான் தம்பியான இளங்கோ அடிகளும் நண்பரான மதுரைக் கூல வாணிகன் சாத்தனாரும் கண்ணகி விழா நிகழ்ச்சிகளை எல்லாம் கூர்ந்து கவனித்து வந்தனர். தேவந்தி என்ற பார்ப்பணத் தோழி, பத்தினிக் கோயிலில் தங்கிப் பூஜையை நாள்தோறும் தவறாமல் செய்து வந்தாள்.