பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15. ஊர்சூழ்வரிக் காதையில்

தனது கணவன் கள்வன் எனப் பொய்யாகப் பழி சுமத்தப்பட்டு கொல்லப்பட்டதைக் கேட்டுக் கண்ணகி கதறினாள். ஆவேசம் கொண்டாள். தனது மற்றொரு சிலம்பைக் கையில் எடுத்துக் கொண்டு நீதிகேட்க மதுரை நகருக்குள் தனது கணவன் கொலையுண்டு கிடக்கும் இடத்திற்குச் சென்றாள். மதுரை நகரின் விதிகளின் வழியே பலவாறு புலம்பிக் கொண்டே அழுது கொண்டே சென்றாள். அப்போது அவள் மதுரை மக்களிடத்திலேயே நீதி கேட்டு வாதிட்டுக் கொண்டே செல்கிறாள். இக்காட்சியை இளங்கோவடிகள் அவலத்தின் உச்சமாக மிக அற்புதமாகச் சித்தரித்துக் காட்டுகிறார். ஒரு ஊரில், ஒரு நாட்டில், ஒரு ஆட்சியில் தவறும் அநீதியும் ஏற்படும்போது, அதைத்தட்டிக் கேட்கும் துணிவும் தவறுகளையும் அநீதியையும் எதிர்த்து நிற்கும் ஆற்றலும் வீரமும் பெறவேண்டும் என்பதை இந்தக்காட்சி உணர்த்துகிறது.

“நீதியில்லாத அரசனுடைய ஊரில் வாழ்கின்ற பத்தினிப் பெண்டிர், இச்சிலம்பு, அச்சிலம்பின் மற்றொன்று, எனது கணவன் கள்வன் அல்லன், எனது கால் சிலம்பின் விலையைக் கொடுக்காமல் அதை அபகரித்துக் கொள்ளும் பொருட்டு கள்வன் என்று பழிகூறி அவனைக் கொன்றார்களே. இதோர் அநியாயம்” என்று ஆவேசத்துடன் குரல் கொடுத்துக் கொண்டே மதுரை விதியில் செல்கிறாள்.

நின்றிலள், நின்ற சிலம்பொன்று கையேந்தி
முறையில் அரசன்றன் ஊரிருந்து வாழும்
நிறையுடைப் பத்தினிப் பெண்டிர்காள் ஈதொன்று
பட்டேன்படாத துயரம் படுகொலை
உற்றேன் உறாதது உறுவனே ஈதொன்று

கள்வனோஅல்லன் கணவன் என்காற்சிலம்பு

கொள்ளும் விலை பொருட்டால் கொன்றாறே ஈதொன்று

என்பது காப்பிய வரிகளாகும்.