பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்

அ.சீனிவாசன்

91


வகையிலும் நெறிமுறைகளை மனித குலத்திற்கு எடுத்துக் கூறி வழிகாட்டியுள்ளார்கள்.

தொடர்ந்து கண்ணகி மதுரை மக்களிடம் மன்னன் செய்த தவறை எடுத்துக் கூறுவதை இளங்கோவடிகளார் மிகச் சிறப்பாக எடுத்துக்காட்டியுள்ளார்.

“மன்னுறு துயர் செய்த மறவினை யறியாதேற்கு

என்னுறுவினை கானா இதுவென உரையாரோ”

என்றும்,

“பார்மிக பழி தூற்றப் பாண்டியன் தவறிழைப்ப,

ஈர்வதோர் வினைகாணா இதுவென உரையாரோ!”

எனவும்,

“மன்பதை பழி துற்ற மன்னவன் தவறிழைப்ப

உண்பதோர் வினைகானா இதுவென உரையாரோ!”

என்றும் கேட்கிறாள். இவை வெறும் அழுகுரல் அல்ல. வெறும் ஒப்பாரியல்ல. ஆவேசக்குரல் என்றே கூற வேண்டம். இன்றும் தொடர்ந்து கூறுகிறாள், மதுரை மக்களிடம் கேட்கிறாள்.

“சான்றோரும் உண்டு கொல், சான்றோரும் உண்டு கொல்
ஈன்றகுழவி எடுத்து வளர்க்குறூஉம்

சான்றோரும் உண்டு கொல்சான்றோரும் உண்டு கொல்”

புகார் நகரம் ஈன்றெடுத்த, குழந்தையைப் போன்ற உள்ளங்கொண்ட கோவலன் தவழ்ந்து கொண்டு மதுரை நகர வாசலுக்கு வந்தபோது, அதை எடுத்துப் பாராட்டுகின்ற சான்றோர் இல்லாமல் என் கணவன் படுகொலை செய்யப்பட்டாரே, இந்த நகரில் நல்ல உள்ளம் படைத்த சான்றோரே இல்லையா என்று மதுரை மாநகர மக்களைக் கேட்கிறாள். இன்னும்,