பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கட்டுரைக் காதையில்

108


விரக்கழலை அணிந்திருந்தாளேனும் இடக்காலிடத்தே ஒப்பற்ற சிலம்பு கிடந்து ஒலிக்கின்ற தன்மையுடைவளும் ஆகிய இம்மதுராபதி தானும் சிறந்த முத்துக்களையுடைய துறையினுடைய கொற்கைப் பட்டினத்தின் தலைவனும், தென்குமரி என்னும் செந்தமிழ்நாட்டு தெற்கெல்லையாகிய கடல் துறையை உடையவனும் பொன்னாகிய குவட்டையுடைய இமயமலையினைத் தனதாட்சிக்கு வடவெல்லையாக உடையவனும், கன்னித்தமிழ் தோன்றிய பொதிகை மலையையுடையவனும் ஆகிய பாண்டிய மன்னனுடைய குலமாகிய இறைக்குலத்தை அது தோன்றிய காலம் தொடங்கிக் காத்து வருகின்ற உரிமை உடையவள் என்று மேற்கூறிய பாடல் வரிகளுக்கு உரையாசிரியர்கள் உரை கூறியுள்ளார்கள்.

இந்த விவரத்தைப் பார்க்கும்போது மதுராபதியென்னும் இத்தெய்வத்தின் உருவம் அம்மையப்பனாக உள்ள இறைவனுடைய திருவுருவம் என்பது தெளிவாகப் புலப்படுகிறது. இந்தத் தெய்வமே பிற்றைக் காலத்தில் அன்னை மீனாட்சியாகவும் சொக்கலிங்கப் பெருமானாகவும் கொள்ளப்பட்டது என்றும், அக் காலத்தில் மதுராபதி என்னும் பெயரோடு பாண்டிய மன்னர்களது குல தெய்வமாகவும் மதுரை நகரின் காவல் தெய்வமாகவும் கொள்ளப்பட்டிருக்கிறது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

இனி இக்காதையில்மதுராபதி என்னும் இக்காவல் தெய்வம், கண்ணகியைப்பின் தொடர்ந்து அவளை சாந்தப்படுத்தி பாண்டிய மன்னர்களின் பெருமைகள் பலவற்றையும் எடுத்துக் கூறி கண்ணகிக்கு ஏற்பட்ட இந்த நிலை ஊழ்வினை காரணமாகும் என்பதையும் நினைவுபடுத்தி “நீ இன்றிலிருந்து பதினான் காம் நாளின் பகல் சென்றபின் நின் கணவனைக் கண் சேர்வாய்” என்று கூறி அனுப்பி வைக்கிறாள்.

பாண்டிய மன்னர்களின் சிறப்புகளையும் வரலாற்றுப் பண்பாடுகளையும் பற்றிக் கூறுகையில் மதுராபதியின் கூற்றாக இளங்கோவடிகள் சிறந்த பல கருத்துகளையும் நிகழ்ச்சிகளையும் கூறுகிறார்.