பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21. காட்சிக்காதையில்

சேரமன்னன் மலை வளம் காணச் சென்றான். அம் மலையின் அழகான தோற்றத்தைப் பற்றிக் கூறும்போது "நெடியோன் மார்பில் ஆரம் போன்று பெருமலை விளங்கிய பேரியாற்றடைகரை" என்று திருமாலின் ஆரம்போன்று அம் மலையில் பேரியாறு ஓடிற்று என்று இளங்கோவடிகள் கூறுகிறார்.

குன்றக் குரவையின் பாடல்களின் ஓசை கேட்டதாகக் கூறும்போது

"குன்றக்குரவை யொடு கொடிச்சியர் பாடலும்

வென்றிச் செவ்வேள் வேலன் பாணியும்"

என்று காப்பிய வரிகள் குறிப்பிடுகின்றன.

மலையகம் வந்த சேர மன்னனிடம் மலைவாழ் குரவர் பெருமக்கள் கண்ணகியைத் தாங்கள் கண்டது பற்றியும் அவள் தனது கணவருடன் தேவர்கள் அழைக்க வானுலகம் சென்றது பற்றியும் கூறினர். அது கேட்ட சேரனிடம் பெரும் புலவர் சாத்தனார் அவ்வரலாறு முழுவதையும் கூறி பத்தினித் தெய்வத்தின் சிறப்புகளை எடுத்துக் காட்டிப்பேசினார்.

அப்பத்தினித் தெய்வத்திற்கு சிலை எடுக்கச் சேரன் தீர்மானித்தான். அதற்காகக் கல் எடுக்க வேண்டும். அதற்கு இமயம் சென்று கல் எடுக்க வேண்டும். கல் கால் கொண்டால் அது கடவுளாகும். அதைக் கங்கையிலும் காவிரியிலும் நீர்ப்படைச் செய்ய வேண்டும் என்றும் சேரன் கூறுவதை.

"விற்றலைக் கொண்டவியன் பேரிமயத்துக்
கற்கால் கொள்ளினும் கடவுளாகும்
கங்கைப் பேர் யாற்றினும் காவிரிப் புனலினும்,

தங்கிய நீர்ப்படை தகவோ உடைத் தெனப்"

என்று காப்பிய வரிகள் குறிப்பிடுவதைக் காண்கிறோம்.