பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
1. தோற்றுவாய்

சிலப்பதிகாரம் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்று. சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என தமிழ் இலக்கியத்தில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கின்றன. வடமொழியில் பஞ்ச காவியங்கள் என்னும் பெயரில் இலக்கியங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதுபோல் தமிழில் ஐம்பெரும் காப்பியங்கள் உள்ளன. ஐம்பெரும் காப்பியங்களில் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவை மிகவும் பிரபலமாகத் தமிழில் நிலைபெற்றுள்ளன. சீவக சிந்தாமணி வடமொழி தொடர்பான கதையைக் கொண்டது என்று கூறப்படுகிறது. வளையாபதி, குண்டலகேசி ஆகிய நூல்கள் முழுமையாக இன்னும் கிடைக்கவில்லை. இந்த ஐம்பெருங் காப்பியங்கள் சமண, பெளத்த நெறிகளை ஆதாரமாகக் கொண்டதும், வணிகர் குலத்திற்கு முக்கிய இடம் கொடுத்தும் உள்ள நூல்களுமாகும்.

சிலப்பதிகாரம் ஐம்பெரும் காப்பியங்களுள் முதன்மையானது. முழுமையானது. முத்தமிழையும், முத்தமிழ் நாடுகளையும், மூவேந்தர்களையும் தழுவியது. சோழ, பாண்டிய, சேர நாடுகளின் தலை நகரங்களான பூம்புகார், மதுரை, வஞ்சி ஆகிய பெரு நகரங்களைக் களங்களாகக் கொண்டது. அந்நகரங்களின் பெயராலேயே புகார் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்னும் மூன்று காண்டங்களைக் கொண்ட நூலாகவும் அமைந்துள்ளது. சிலப்பதிகாரம் கண்ணகியின் கற்பின் வலிமையைக் காட்டும் நூலாகும். கற்பின் வலிமைக்கு பாரத நாட்டில் தனிச்சிறப்பும் இடமும் உண்டு. கற்புடைப் பெண்டிரையும், கற்புடை ஆண்களையும் தெய்வ நிலைக்கு உயர்த்தியது பாரதநாடு.

இருபதாம் நூற்றாண்டின் புரட்சிகர ஜனநாயகப் பெரும்புலவன் பாரதி "நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர். மணியாரம் படைத்த தமிழ்நாடு” என்றும் “யாமறிந்த புலவரிலே, கம்பனைப் போல வள்ளுவர் போல, இளங்கோவைப் போல், பூமிதனில் யாங் கணுமே பிறந்ததில்லை” என்றும்,