பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்

அ.சீனிவாசன்

137


இமயம் வரை சென்று அம்மலையில் தனது வில்லினைப் பொறித்த வெற்றி கொண்டவன் ஒரு சேரன்.

ஒரு அந்தணனும் அவனுடைய மனைவியும் ஒரு சேரமன்னனிடம் சென்று அவனைப்புகழந்து திறன் மிக்க கவி பாடி, அதைக் கண்டு மகிழந்து அச் சேரமன்னன் உமக்கு என்ன பரிசில் வேண்டுமெனக் கேட்க, “நானும் எனது பார்ப்பணியும் சுவர்க்கம் செல்ல வேண்டும். அதற்குரிய யாகத்தைச் செய்க” என்று அந்த அந்தணன் கேட்க, அத்தகையதொரு மகா யக்ஞத்தைச் செய்து முடித்து, அவ்வந்தணனும் அவனது துணைவியும் சுவர்க்கம் செல்ல வழிவகுத்துக் கொடுத்தவன் ஒருசேரன்.

மன்னுயிர்களைக் கவரும் யமதர்மன், தவத்துறை மக்கள், மிகப்பெரும் செல்வர், இளம் பெண்டிர், பாலகர், முதியோர், இளையோர் என்று பாராமல் முறையின்றி தனது வேலைகளைச் செய்து கொண்டிருந்த தைத்தடுத்து, அக்கூற்றுவனையும் மன்னுயிர்களை முறையாகக் கொள்கவென ஒரு எல்லைக்குட்படுத்தினான் ஒரு சேரமன்னன்,

வளம் மிக்க யவனர் நாட்டையும் வென்று அதன் ஆட்சியை நடத்தி, இமயத்திற்கும் சென்று அதைத் தனது ஆளுகைக்கு உட்படுத்தினான் ஒரு சேரமன்னன்.

பெரும்படை திரட்டி, அதைக் கண்டு தனது பகைவனை பயந்து ஓடச்செய்து அப்பகைவனது கோட்டையைத் தகர்த்து தரைமட்டமாக்கினான் ஒரு சேரன்.

அயிரை மலையின் கண் இருந்த கொற்றவையை அவ்வாற்றின் கண் நீராட்டியும், இரு கடல் நீர்களையும் வரச் செய்து நீராடிப் புகழ் பெற்றான் ஒரு சேரமன்னன்.