பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோற்றுவாய்

2


தோற்றுவாய் சிலப்பதிகாரச் செய்யுளைக் கருதியும், திருக்குறளுறுதியும் தெளிவும், பொருளின் ஆழமும் விரிவும் அழகும் கருதியும் எல்லையொன்றின்மையெனும் பொருளதனைக் கம்பன் குறிகளால் காட்டிட முயலும் முயற்சியைக் கருதியும், முன்பு நான் தமிழ்ச் சாதியை அமரத்தன்மை வாய்ந்தது என்று உறுதி கொண்டிருந்தேன் என்றும் குறிப்பிடுகிறார். இவ்வாறு பாரதி சிலப்பதிகார நூலின் சிறப்பையும், அதன் ஆசிரியர் பெருந்தகை இளங்கோவடிகளாரின் பெருமையைப் பற்றியும் மிக உயர்த்தித் தமிழின் பெருமையுடன் இணைத்துப் பெருமையுடன் பேசியுள்ளதைக் காண்கிறோம்.

இளங்கோவடிகளாரின் சமய நிலை பற்றிப் பல கருத்துக்களும் கூறப்படுகின்றன. ஆயினும் சிலப்பதிகார நூலை வைத்துப் பார்க்கும்போது, அவர் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்பது தெளிவாகும். அதில் எந்தவித சந்தேகத்திற்கும் இடமில்லை. அவர் தனது கதை நெடுகிலும், பல முக்கிய இடங்களிலும், சமணத்தின் அறப்பள்ளிகள், சாரணர் மற்றும் சமணத்துறவிகளையும் மிகவும் சிறப்பித்துக் கூறுகிறார். அவர் கண்ணகியை ஒரு சிறந்த பாத்திரமாகப் படைத்துள்ளார். சிறந்த பாத்திரம் மட்டுமல்ல கண்ணகியே முதன்மையான பாத்திரமும் முழு முதல் பாத்திரமுமாகும். அவள் தனது கற்பு நிலையின் வலிமையில் தெய்வ நிலைக்கு உயர்ந்தவள். கண்ணகி மிகவும் உறுதியான சமண சமயப்பற்று கொண்டவளாகவே அடிகளார் முதன்மைப் படுத்தியுள்ளார்.

இளங்கோவடிகளார் சமண சமயச் சார்புள்ளவராக இருப்பினும் அவர் பிற சமயங்கள் பால் வெறுப்புக் காட்டவோ, பிற சமயங்களைப் புறக்கணிக்கவோ இல்லை. சிறந்த மனிதாபிமானமும் பொதுக் கருத்துக்களும் நிறைந்த மாபெரும் தமிழ்ப் பாவலனாகத் தலை சிறந்த அறிவுச் செல்வராகவே திகழ்ந்தார். அவர் காலத்தில் பாரத நாட்டில் புத்த சமணக் கருத்துகளும் அறநெறிகளும் பரவியிருந்தன. அத்துடன் ஏற்கனவே மக்களிடையில் இந்து தர்மம் என்று அழைக்கப்படும். சநாதன தர்மமும் வேதநெறிகளும், இராமாயணம் மகாபாரதம் புராணங்கள் முதலியவை