பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூலாசிரியரைப் பற்றி

அ.சீனிவாசன் 1925ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 6ம் நாள் அன்றைய இராமநாதபுரம் மாவட்டம் இன்றைய விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்துர் தாலூகா, மகராஜபுரம் கிராமத்தில் பிறந்தார். இளம் வயதிலேயே தாய் தந்தையர் மூலம், நாலாயிரத்திவ்யப்பிரபந்தம், இராமாயணம், மகாபாரதம் பாகவதம் நளவெண்பா போன்ற நூல்களில் அறிமுகமானவர். பள்ளிப்படிப்பு காலத்திலேயே விடுதலை இயக்கத்தில் பற்றுகொண்டு ஈடுபட்ட காரணத்தாலும், குடும்பச் சூழ்நிலையின் ஏழ்மையாலும் கல்லூரிப் படிப்பைத் தொடர முடியாமல், இரண்டாம் உலகப் போர் காலத்தில் இந்திய விமானப் படையில் சேர்ந்து தொழில் நுட்பப்பொறியியல் பயிற்சி பெற்று, பணியாற்றினார். போர் பிற்காலத்தில் ஏற்பட்ட சுதந்திரப் பேரெழுச்சியில் படைப் பிரிவுகளும் பங்கு பெற்று அதில் முன்னணியில் இருந்த காரணத்தால் விமானப் படையிலிருந்து விடுவிக்கப்பட்டு 1947ம் ஆண்டு தொடக்கத்திலேயே விடு வந்து சேர்ந்தார்.

இந்தியப் பொதுவுடைமை இயக்கத்திலும் தொழிற் சங்க இயக்கத்திலும் தீவிரமாகப் பங்கு கொண்டு மாநில அளவிலும், தேசீய அளவிலும் பல பொறுப்புகளை வகித்துள்ளார். பல முறை சிறை சென்று, தியாகத் தழும்புகளை ஏற்றவர். சொந்த முயற்சியாலும் கடின உழைப்பாலும் இலக்கியப் பயிற்சியும் எழுத்துப் பயிற்சியும் பெற்றவர்.

தத்துவஞானம், அரசியல் பொருளாதாரம், வரலாறு பற்றிய பல நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தும் சொந்த நூல்கள் எழுதியும் உள்ளார்.

திரு.அ.சீனிவாசன் அவர்கள் எழுதிய நூல்களில் காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு, மார்க்கிய – லெனினியத்தின் அடிப்படைகள் முதலிய மொழிபெயர்ப்பு நூல்களும், மார்க்சீய பொருளாதார தத்துவம் ஜீவாவின் தமிழ்ப்பணிகள், கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி ஆகிய மூலநூல்களும் முக்கியமானவை. நூலாசிரியரின் சிறந்த எழுத்துப் பணிகளுக்காக, 1984ம் ஆண்டில் சோவியத் நாடு நேரு விருது பெற்றவர்.