பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூலாசிரியரைப் பற்றி

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜனசக்தி நாளிதழின் தலைமை ஆசிரியராகப் பத்து ஆண்டு காலத்திற்கு மேல் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். இந்நூலாசிரியர் ஜனசக்தி நாளிதழ் ஆசிரியராக இருந்தபோது சிறந்த முறையில் காரல் மார்க்ஸ் நூற்றாண்டு மலரும் பாரதி நூற்றாண்டு மலரும் கொண்டு வந்தது பலராலும்பாராட்டப்பட்டது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவ மாத இதழான மார்க்சீய ஒளியின் ஆசிரியராகப் பணியாற்றி அனுபவம் பெற்றவர். இம்மாத இதழின் ஆசிரியராக இருபது ஆண்டு காலம் ஆற்றிய அரும்பணிக்காக செக்கோஸ்லோவேகியாவை தலைமையிடமாகக் கொண்ட உலக மார்க்ஸிய ரிவ்யூ அமைப்பின் மூலம் 1983ம் ஆண்டில் இதழாசிரியருக்கான கெளரவப் பட்டயம் பெற்றவர்.

இப்போது தனது தொடர்ச்சியான அரசியல் மற்றும் தொழிற் சங்கப்பணிகளுடன் கம்பன், வள்ளுவர், இளங்கோ, வள்ளலார், பாரதி ஆகியோரின் படைப்புகளிலும், ஆழ்வார்களின் திவ்வியப்பிரபந்தம் முதலியவற்றிலும் தீவிரமான பயிற்சியும் ஆய்வும் செய்து பல நூல்களை எழுதி வருகிறார்.

அந்தச் சீரிய முயற்சியின் பலனாக உருவாகியுள்ளது. சிலப்பதிகாரத்தில் வைதிகக் கருத்துக்கள் என்னும் இந்த நூலுமாகும்.

பாரதியின் புதிய ஆத்தி சூடி – ஒரு விளக்கவுரை, பாரதப் பண்பாட்டு தளத்தில் பாரதி என்னும் நூல்களையும் திரு.அ.சீனிவாசன் அண்மையில் எழுதி வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

திரு.அ.சீனிவாசன் அண்மையில் பாரதீய ஜனதாக் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு அதன் மாநில செயற்குழு உறுப்பினராகவும் ஒரே நாடு பத்திரிகையின் ஆசிரியர் குழு உறுப்பினராகவும் பொறுப்பேற்று நாட்டுப் பணியில் ஈடுபட்டு வருகிறார்.