பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்

அ.சீனிவாசன்

3


செல்வாக்குப் பெற்றும் பரவியிருந்தன. அத்துடன் நாடு முழுவதிலும் பல இடங்களிலும் சமய வாதங்களும் சமயம் சார்ந்த பட்டிமண்டபங்களும் நடந்து கொண்டிருந்தன. இந்து சமயத்திலும் பல வாதங்களும், கருத்து மோதல்களும் மாற்றங்களும் ஏற்பட்டுக் கொண்டிருந்தன.

வேத காலத்தில், குறிப்பாக ரிக் வேதத்தில் இந்திர வழிபாடும் ஐந்திரமும் முதலிடம் பெற்றிருந்தது. சிலப்பதிகாரத்தில் கூட இந்திர விழா முக்கிய நிகழ்ச்சியாக இடம் பெற்றிருப்பதைக் காண்கிறோம். ஆயினும் பிற்காலத்தில் இந்திரன் பின்னுக்குத் தள்ளப்பட்டுச் சாதாரண தேவர்களில் முதன்மை பெற்றவனாகவே இன்று கருதப்படுகிறான். தமிழகத்தில் இந்திரன் இருந்த இடத்தில் முருகன் தேவசேனாபதியாக இந்திரன் மகள் தேவயானியைத் திருமணம் செய்துகொண்டு, முக்கிய இடம் பெற்றிருக்கிறான். தமிழகத்தில் முருகனுக்கு ஆறுபடை வீடுகளிலும், இதர பல பெரிய கோயில்கள் பலவும் ஏற்பட்டு விட்டன. தமிழகத்தில் முருகனைப் பற்றிய கந்தபுராணம் முக்கிய இடத்தைப் பெற்று விட்டது. சூரசம்ஹாரம் முக்கிய விழாக்களின் ஒன்றாக இடம் பெற்றுவிட்டது.

அக்னி வழிபாடும் ஆக்நேயமும் வேத காலத்தில் இருந்த முக்கியத்வத்தைப் பின்னர் இழந்துவிட்டது என்று கூறலாம். ஓரளவு ஆக்நேயம் சிவத்தில் அடங்கிவிட்டது என்று கூறலாம். அக்னி வழிபாடு, சூரிய வழிபாடு முதலியவை அன்றாட பழக்கங்களிலும் சடங்குகளிலுமான சம்பந்தத்துடன் சுருங்கி விட்டன என்று கூறலாம். ஆயினும் சக்தி வழிபாட்டின் பகுதியாக அக்கினி மிதித்தல், அக்கினிசட்டி தாங்குதல், தீப ஒளி விழா முதலியன சாதாரண மக்களின் வழிபாட்டுப் பகுதியாக நிலை பெற்றிருப்பதைக் காண்கிறோம்.

இந்து தர்மத்தின் விளக்கங்களின்படி மும்மூர்த்திகளில் ஒருவராகப் பிரம்மா இடம் பெற்றிருக்கிறார். படைப்புக் கடவுளாகப் பிரம்மா இன்றும் மக்களால் போற்றப்படுகிறார். ஆயினும் பிரம்மாவிற்கென பெரிய கோயில்கள் நாட்டில் இல்லை.