பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள் அ.சினிவாசன்

7


மனிதன் அவ்வாறு தொழில் செய்யும்போது உடல் உழைப்பின் மூலமான தொழில்கள் மட்டுமல்லாமல் அறிவின் மூலமாகச் செய்யப்படும் மூளை உழைப்பும் உழைப்பேயாகும். சாகுபடி செய்தல், பயிரிடுதல், நெசவு நெய்தல், மீன் பிடித்தல், கைத்தொழில்கள் செய்தல், எழுதுதல், படித்தல், பாடுதல், கவிதை புனைதல், ஆடுதல், படம் வரைதல், ஓவியம் தீட்டுதல், சிலைகள் செய்தல், கற்பித்தல், வைத்தியம் செய்தல், வண்டி ஓட்டுதல் முதலிய அனைத்தும் தொழில்களேயாகும். ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தொழிலைச் செய்யாமல் இருக்கமுடியாது. தொழில் செய்வது மனிதனின் இயல்பாகும். அவ்வாறு அவன் தொழில் செய்யும்போது அத்தொழில் தனக்காக மட்டுமல்லாமல் சமுதாயத்திற்காகவும், உலகத்திற்காகவும் இணைந்தே செய்வதாக அமைகிறது அது எவ்வாறு?

எடுத்துக்காட்டாக நிலத்தில் சாகுபடி செய்யும் ஒரு விவசாயி தனது பயிர்தொழிலை செய்யும்போது, மலை, காடு, ஆறு, நீர், நிலம், காற்று, தீ, ஆகாயம், தாவரங்கள், விலங்குகள் முதலியவற்றுடன் தொடர்பு கொள்கிறான். பயிர்த்தொழில் மூலம் உணவுப்பொருள்களும், பருத்தி, காய்கனிகள் முதலியவைகளையும் சாகுபடி செய்து உற்பத்தி செய்கிறான். அவை சாகுபடி செய்பவர்களுக்கு மட்டுமல்லாமல், இதர மனிதர்களுக்கும், மனித சமுதாயத்திற்கும் உலகிற்கும் பயன்படுகிறது. அத்துடன் சுற்றிலும் உள்ள புழு, பூச்சி, எறும்பு, எலி, வண்டுகள், பறவைகள், விலங்குகள் முதலிய இதர ஜீவராசிகளுக்கும் உணவு கிடைக்கிறது. சாகுபடித் தொழில் மூலம் காற்றைச் சுத்தப்படுத்தத் துணை புரிகிறான். தாவர வளர்ச்சிக்கும் பெருக்கத்திற்கும் உதவுகிறான். உணவு தான்யங்கள் உற்பத்தி செய்யப்பட்டு களத்தில் குவிக்கப்பட்டிருக்கும்போது சாகுபடிப் பணிகளில் ஈடுபட்ட இதர பணியாளர்களுக்கு ஊதியமாகக் கொடுப்பதுடன், கிராமப் பணியாளகள் கோயில் ஊழியர்கள், கணக்கர்கள், காவல்காரர்கள், அரசுப் பணியாளர்கள், முதலிய பலரும் ஊதியமாகவும், இனாமாகவும் கூட தானியம் வினியோகமாகிறது. சில சமயம் திருடர்களும் பொதுவானவர்களும் கூட பலனை எடுத்துக் கொண்டும் அபகரித்துக் கொண்டும் செல்கிறார்கள்.