பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோற்றுவாய்

12


சிலப்பதிகாரக் காலத்தில் நாட்டில் நிலையான அரசுகள் ஏற்பட்டுவிட்டன. குறுநில மன்னர்கள் சிறுநில மன்னர்கள் என்று வளரச்சி பெற்று பெருநில மன்னர்களாக தமிழகத்தில் மூவேந்தர்கள் நிலை பெற்று நல்லாட்சி நடத்தி வந்தனர்.

மனிதன் காடுகளிலும் மலைகளிலும் காட்டு மனிதர்களாகவும், பழங்குடி மக்களாகவும், உணவு சேகரித்துக் கொண்டும், வேட்டையாடிக் கொண்டும் மர உரிதரித்துக் கொண்டும் நாகரிகம் அறியாதவர்களாக இருந்த நிலை மாறி கால்நடைகளை மேய்த்துக் கொண்டு நாடோடிகளாக இடம் விட்டு இடம் போய்க்கொண்டும் நாடுவிட்டு நாடு, நிலம் விட்டு நிலம் மாறிக் கொண்டிருந்த காலமும் மாறி விரிவான நிலங்களில் சாகுபடி செய்தும், மந்தை மந்தையாக நிலை பெற்ற கால்நடைப் பண்ணைகளை உருவாக்கியும், நீர்ப்பாசன நிலைகளை நிர்மாணித்தும் பல்வேறு தொழில்கள் வளர்ச்சி பெற்றும், வாணிபம் பெறுகியும் மனித நாகரிகம் வளர்ச்சி பெற்ற காலத்தில் சமுதாயத்தை ஒழுங்கு முறைப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்ட காலத்தில் அரசுகளும் அரசியல் நெறிமுறைகளும் தோன்றி வளர்ந்து நிலை பெற்றன. அதில் பாரதம் முதலிடம் பெற்றிருக்கிறது.

அரச நீதி பற்றி நமது அரிய சாத்திரங்கள் இலக்கியங்கள் இதிகாசங்கள் பலவும் விரிவாக எடுத்துக் கூறுகின்றன. அவைகளில் பிழைபடாத அரசியல் வலியுறுத்தப்படுகிறது. அரசு என்பது அறத்தின் பால்பட்ட அரசியலை செங்கோல் ஆட்சியை நடத்த வேண்டும் என்பதாகும். அதற்கு மாறாக அரசு பிழைபடும் போது அறமே கூற்றாகி அப்பிழைபட்ட அரசு நீக்கப்படுகிறது என்னும் உண்மையை சிலம்புக்கதை நமக்கு எடுத்துக் கூறுகிறது.

“நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி
        நலம்பு றிவாள் எங்கள்தாய் - அவர்
அல்லவராயின் அவரை விழுங்கிப்பின்

        ஆனந்தக் கூத்திடுவாள்”