பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. மங்கல வாழ்த்துப் பாடல் காதையில்

பொதுவாக நூல்களின் தொடக்கமாக கடவுள் வாழ்த்துப் பாடல் இடம் பெறுவது நமது இலக்கிய மரபாகும். சில நூல்களில் இக்கடவுள் வாழ்த்துப்பாடல் பொதுவாகவும் சில நூல்களில் குறிப்பிட்டும் பாடப்பட்டிருப்பதைக் காண்கிறோம்.

கம்பன் தனது இராமாவதாரக் காவியத்தின் கடவுள் வாழ்த்துப்பாடலாக

“உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டுடையார் அவர்

தலைவர், அன்னவர்க்கே சரண் நாங்களே!

என்று மிகப் பொதுவாகவும்

“ஆதி அந்தம் அரியென, யாவையும்
ஓதினார் அலகில்லன உள்ளன
வேதம் என்பன, மெய்ந்நெறி நன்மையான்

பாதம் அல்லது பற்றிலர் பற்று இலார்”

என்று சற்று தெளிவு படுத்தியும் பாடியுள்ளதைக் காண்கிறோம்.

வள்ளுவப் பெருமானும் தனது புகழ் மிக்க அறநூலான திருக்குறளில்

அகரமுதல எழுத் தெல்லாம்

ஆதி பகவன் முதற்றே உலகு

என்று தொடங்கி பத்து குறள் பாக்களிலும் பொது நெறியான இறைத்தன்மையைக் குறித்துப்பாடுகிறார். அத்துடன் பாயிரத்தில் கடவுள் வாழ்த்துக்கு அடுத்தபடியாக வான் சிறப்பையும், நீத்தார் பெருமையையும் அறன்வலியுறுத்தலையும் குறிப்பிட்டுப் பாடியுள்ளதைக் காண்கிறோம்.