பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4. அறங்கேற்று காதையில்

சிலப்பதிகாரக் காப்பியத்தில் இக்காதை தனித்தன்மையும் தனிச்சிறப்பும் மிக்கதாக அமைந்துள்ளது. இந்திய சமுதாயத்தின் நாகரிக வளர்ச்சியின் உயர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக இக் காதையின் நிகழ்ச்சிகள் அமைந்துள்ளன. இக்காதையில் விவரிக்கப்படும் ஆடல், பாடல், இசை, நாடகம் ஆகியவைகளின் பலவகைப் பாணிகளும் இயல்புகளும் அவற்றிற்கு அங்கமானவைகளும் மிகவும் விரிவாகவும் நுட்பமாகவும் கூறப்பட்டுள்ளன.

இந்து சமயம், குறிப்பாக பக்தி இயக்கம் தோன்றிய பின்னர், இசையை தெய்வீக நிலைக்கு மேலும் உயர்வாக உயர்த்தியது. இசையும், பாட்டுகளும் நாடகம், நாட்டியம், கூத்துகளும், விழாக்களும், சிறிய பெரிய திருவிழாக்களும் பொங்கல் விழாக்களும் இந்து வாழ்க்கை முறையின் வழியாக வளர்ச்சி பெற்றிருக்கின்றன.

பிறக்கும்போது தாலாட்டு முதல் மறையும் போது ஒப்பாரி வரை வாழ்க்கையின் அத்தனை நிகழ்ச்சிகளிலும் ஆடல், பாடல், இசை ஆகியவை இடம் கொண்டிருக்கின்றன. சமுதாய வளர்ச்சியில் மகிழ்ச்சியும் எழுச்சியும் உணர்ச்சி வேகமும் அதிகரிக்கும்போது ஆடல், பாடல், இசை, கூத்து ஆகியன மனித வாழ்க்கையில் முக்கிய இடம் பெறுகின்றன. வளர்ச்சி பெறுகின்றன. அவை சமுதாய உணர்வு நிலையை, பிரக்ஞையை உயர்த்துவதற்கும் வெளிப்படுத்துவதற்கும் சிறப்பாகப் பயன்படுவதையும் காண்கிறோம்.

உலகமே நாட்டிய வடிவத்தில் இயங்கிக் கொண்டிருப்பதை இந்திய சாத்திரங்கள் குறிப்பிடுகின்றன. அந்த நாட்டியத்தின் உயர்ந்த வடிவத்தில் நடராஜப் பெருமானும் கண்ணபிரானும் இந்திய மக்களின் வாழ்க்கையில் நீங்காத இடம் பெற்றிருக்கிறார்கள். பஞ்ச பூதங்களின் அசைவுகளும் செடிகொடி மரங்களின் அசைவுகளும் விலங்கினங்களின் சப்தங்களும்