பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள் அ.சினிவாசன்

27


என இக்காதையின் கடைசியில் வரும் வெண்பாவில் குறிப்பிடுகிறார் அடிகளார்.

இந்த மாதவி யார்? கணிகையர் குலத்தில் தோன்றியவள் எனக் கதையில் வந்த போதிலும் வானவர் மகளிரான உருப்பசியின் மரபில் வந்தவளாகக் காப்பியம் குறிப்பிடுகிறது.

"தெய்வமால் வரைத் திருமுனியருள
எய்திய சாபத்து இந்திரச் சிறுவனோடு
தலைக் கோல்தானத்துச் சாபம் நீங்கிய
மலைப்பருஞ்சிறப்பின் வானவர் மகளிர்

சிறப்பிற்கு குன்றாச் செய்கையொடு பொருந்திய
பிறப்பிற்குன்றாப் பெருந்தோள் மடந்தை

தாதவிழ் புரி குழல் மாதவி"

எனக்காப்பியவரிகள் குறிப்பிடுகின்றன.

இவ்வரிகள் "தெய்வத்தன்மைமிக்க பெரிய மலையாகிய பொதிகையின் கண் உள்ள அகத்திய முனிவன் அருளால் முன்பு சாபமெய்திய இந்திரகுமாரனாகிய சயந்தனேயாகும், நாடக அரங்கின் கண்ணே சாபம் நீங்கப்பெற்ற, மாறுபாடுகளில்லாத, சிறப்பினையுடைய அரம்பையரின் வரிசையில் குன்றாத நாடகத் தொழிலோடு பொருந்திய உருப்பசியாகிய அம்மாதவி மரபில் வந்த பிறப்பில் குறையில்லாத பெரிய தோள்களையுடைய மடந்தையாகிய, தாது விரியும் பூக்களை அணிந்த கடை குழன்று சுருண்ட கூந்தலையுடைய மாதவி என்று பொருள்படுகிறது. இங்கு வானவர் மகளிரான ஊர்வசியின் மரபில் வந்தவள் மாதவி" என்று உறுதிப்படுத்தப்படுகிறது.