பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்திர விழவூ ரெடுத்த காதையில்

38



நான்மறை மரபின் தீ முறையொருபால்
நால்வகைத் தேவரும் மூவறு கணங்களும்
பால்வகை தெரிந்தப்பகுதித் தோற்றத்து

வேறு வேறு கடவுள் சாறு சிறந்தொரு பால்"

என்று இளங்கோவடிகளார் கூறும் சிறப்பு மிக்க காப்பிய வரிகளில்

ஆயிரம் பொற்குடங்களில் புண்ணிய காவிரி நீர் கொண்டு வந்து, உலகோர் புகழ, வானோர் வியப்ப இந்திரனுக்கு விழு நீராட்டியும் மற்றும் மகாதேவனாகிய இறைவன் கோயில், ஆறுமுகனான முருகன் கோயில், பல தேவன் கோயில் நீல மேனியனான திருமால் கோயில், இந்திரன் கோயில் ஆகிய கோயில்களில் நான்கு வேதங்களில் சொல்லியபடி வழிபாடுகளும் விழாக்களும் நடைபெற்றன என்றும், அத்துடன்

நால்வகைப்பட்ட தேவர்கள் மற்றும் பதினெண் வகைப்பட்ட கணங்களுக்கும் மற்றும் இதர பல வேறு கடவுளர்களுக்கும் விழாக்கள் நடைபெற்றன என்றும் இந்து சமய வழிபாடுகளைப் பற்றி சிறப்பித்துக் கூறுகிறார்.

இங்கு, இந்திரன், மகாதேவன், முருகன், பலதேவன், திருமால் கோயில்கள் குறிப்பிடப்படுகின்றன. இவை பெரிய கோயில்களாகும் .அத்துடன் வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நால்வகை தேவர்கள், பதினெட்டு கணங்கள் பற்றியும் அவர்களுக்கு நடைபெற்ற விழாக்கள் பற்றியும் காப்பியம் குறிப்பிடுகிறது.

நால்வகைத் தேவர்கள் என்பது வசுக்கள் எண்மர், ஆதித்தர் பன்னிருவர், உருத்திரர் பதினொரு பேர், மருத்துவர் இருவர் என்று வேதங்கள் குறிப்பிடும் தேவர்களாகும். பதினெண் கணங்கள் என்பது கின்னார், கிம்புருடர், வித்தியாதரர், கருடர், தேவர், அசுரர், முனிவர், இயக்கர், இராக்கதர், கந்தருவர், சாரணர், சித்தர், ஆகாச வாசிகள், நாகர், பூதம் வேதாளம், தாராகணம், போக பூமியர் என்று வேதங்கள் குறிப்பிடுகின்றன.