பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8. காடுகாண் காதையில்

கோவலன், கண்ணகி, கவுந்தியடிகள் ஆகிய மூவரும் உறையூரை அடைந்து, அங்கிருந்து தெற்குநோக்கி சென்று ஒரு அழகிய சோலையை அடைந்தனர். அங்கு பாண்டிய மன்னனை வாயார வாழ்த்திக் கொண்டு ஒரு முதிய அந்தணன் வந்து சேர்ந்தான். அவனிடம் தாங்கள் யார், இங்கு வரக்காரணம் யாது என்று கோவலன் கேட்க அம்மாமுது மறையோன் கூறியது :

“தீது தீர் சிறப்பின் தென்னனை வாழ்த்தி
மாமுது மறையோன் வந்திருந்தோனை
யாது நும் ஊர் ஈங்கென்வரவெனக்
கோவலன் கேட்பக் குன்றாச் சிறப்பின்

மாமறையாளன் வரும் பொருள் உரைப்போன்”

திருவரங்கத்தில் திருமால் கிடந்த வண்ணத்தையும், திருவேங்கடத்தில் நின்ற வண்ணத்தையும் காண வந்தேன் என அம்மாமுது மறையோன் கூறியதை இளங்கோவடிகள் மிகவும் சிறப்பாக விவரித்துத் தனது பாடல் வரிகளில் குறிப்பிடுகிறார்கள்.

“நீலமேகம் நெடும் பொற் குன்றத்துப்
பால்விரிந்தகலாத்து படிந்தது போல
ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறற்
பாயற் பள்ளிப்பலர் தொழுதேத்த
விரிதிரைக்காவி ரிவியன் பெருந்துருத்தித்
திருவமர் பார்பன் கிடந்த வண்ணமும்
வீங்கு நீர் அருவி வேங்கட மென்னும்
ஓங்குயர் மலையத்துச்சி மீமிசை
விரிகதிர் ஞாயிறுந்திங்களும் விளங்கி
இரு மருங்கோங்கிய இடைநிலைத்தானத்து
மின்னுக் கோடியுடுத்து விளங்குவிற்பூண்டு
நன்னிற மேகம் நின்றது போலப்
பகையணங்காழியும் பால் வெண்சங்கமும்,
தகை பெறு தாமரைக் கையினேந்தி

நலங்கிளர் ஆரம்மார்பிற் பூண்டு