பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆசிரியர் உரை

அக்காலத்தில் வணிகப் பெருமக்கள் பலரும் பெரும்பாலும் சமண பௌத்த சமயங்களுக்கு ஆதரவு கொடுத்ததாகத் தெரியவருகிறது. இருப்பினும் இந்தக் காப்பியங்களின் நூலாசிரியர்கள் இதர பொதுக் கருத்துகளையும் மக்களிடம் அக்காலத்தில் நிலவி வந்த வேத சமயக் கருத்துக்களையும் நம்பிக்கைகளையும், வழிபாட்டு முறைகளையும் சிறப்பித்தும் விவரித்தும் கூறியுள்ளார்கள்.

இளங்கோவடிகளார் தனது மாபெரும் தமிழ்க் காப்பியத்தில் பல இடங்களிலும், தனது சிறந்த பல பாத்திரப்படைப்புகள் மூலமும் வேத சமயக்கருத்துக்களையும் தெய்வங்களையும் வழிபாட்டு முறைகளையும் மக்களுக்கு வழிகாட்டும் நெறிமுறைகளையும், மக்களுடைய பல்வேறு பழக்கவழக்கங்கள், வழிபாடுகள், வாழ்க்கை முறைகள் பற்றியும் மிகவும் நுட்பமாகவும் நேர்த்தியாகவும் எடுத்துக் கூறியுள்ளதைக் காண்கிறோம்.

வேத சமயம் என்பது பன்முகத்தன்மை கொண்டதாக இருக்கிறது. பல பிரிவுகளையும் பன்முகமான வழிபாட்டு முறைகளையும் விழாக்களையும், வாழ்க்கை முறைகளையும் கொண்டதாக உள்ளது. வேத சமயம் என்பது வேறு சில சமயங்களைப்போல ஒரு கடவுள் ஒரு நிறுவனம், ஒரு தூதர், ஒரு தீர்க்கதரிசி, ஒரு பாதுகாவலர், ஒரு அமைப்பு, ஒரு தலைமை, ஓரு பரிபாலனம், ஒரு புனித ஸ்தலம் என்று இருக்கவில்லை. வேத சமயம் என்பது பல சமயங்களின் கூட்டமைப்பு என்று கூறலாம். படைத்தல், காத்தல், நீக்கல் தொழில்களைச் செய்யும் கடவுள்களாக பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூர்த்திகள் போற்றப்படுகிறார்கள். ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்னும் நான்கு வேதங்களையும் வேதங்களின் சாரமாகப் பின்னர் வந்த உபநிடதங்களையும் ஆதாரமாகக் கொண்டு ஐந்திரம் (இந்திர வழிபாடு), ஆக்னேயம் (அக்கினி வழிபாடு), காணபத்தியம் (கணபதி வழிபாடு) வைணவம் (திருமால் வழிபாடு), சைவம் (சிவவழிபாடு) சாக்தம் (சக்தி வழிபாடு) ஆகிய ஆறு சமயங்களையும் ஆதிசங்கரர் ஒன்றுபடுத்தினார் என்று கூறுவார்கள். இவைகளிலும் காலத்தால் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

பாரத புண்ணிய பூமியில் தோன்றியுள்ள எண்ணற்ற ஞானிகள், அறிஞர்கள், முனிவர்கள், சித்தர்கள், பேரறிவாளர்கள், பெருந்தகையினர் பலரும் தங்கள், ஆழ்ந்த சிந்தனைகள் மூலமும், பரந்த அனுபவங்களின் மூலமும்,