பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11. ஊர்காண் காதையில்

அதிகாலையில் மதுரை நகரைச் சுற்றிப் பார்க்கக் கோவலன் செல்ல விருக்கிறான். அந்த அழகிய மதுரையம் பதியைக் குறிப்பிடும்போது, இளங்கோவடிகளார், இறைவனது கோயிலும், திருமாலின் கோயிலும், பலராமன் கோயிலும் முருகன் கோயிலும், அத்துடன் அறவோர் பள்ளியும், மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும் இருந்தனவென்றும் அவ்விடங்களிலிருந்து எழுப்பப்பட்ட காலை முரசுகளும் பாட்டுகளும் மதுரை மக்களைத் துயில் எழுப்பியது என்றும் குறிப்பிடுகிறார்.

நமது கோயில்களில் அதிகாலையில் பள்ளியெழுச்சிப் பாடல்களும் பாவைப்பாடல்களும் சுப்ரபாதங்களும் பாடுவதும் காலை பூசைக்கான முரசுகள் வாத்தியங்கள் முழங்குவதும் இந்து சமய மரபாகும்.

“வேந்துதலை பனிப்ப ஏந்து வாட் செழியன்
ஓங்குயர் கூடல் ஊர்துயிலெழுப்ப
நுதல் விழி நாட்டத்து இறையோன் கோயிலும்
உவணச் சேவல் உயர்ந்தோன் நியமமும்
மேழி வலனுயர்த்த வெள்ளை நகரமும்
கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும்
அறத்துறை விளங்கிய அறவோர்பள்ளியும்
மறத்துறை விளங்கிய மன்னவன் கோவிலும்
வால் வெண்சங்கொடு வகை பெற்றோங்கிய

காலை முரசும் கனை குரல் இயம்ப”

என்று காப்பிய வரிகள் குறிப்பிடுகின்றன.

அந்த அதிகாலை நேரத்தில் கோவலன், கவுந்தி அடிகளிடம் சென்று நான் நல்லொழுக்க நெறியினின்று நீங்கியோன் ஆகி, நறுமணம் மிக்க மலர்களைப் போன்ற மேனியை உடைய கண்ணகியைத் துயரத்தில் ஆழ்த்தி, இப்போது முன்பின் அறியாத ஊருக்கு வந்து சிறுமையடைந்துள்ளேன். இந்நகரத்தில் உள்ள வணிகப் பெருமக்களுக்கு